திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹
🌹 🌿 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹
திருப்பெருந்துறையில் அருளியது
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !
பொருள் :
விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !