பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் 1.80 லட்சம் பேர் பயணம்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட மூன்று பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.
இதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று (10-ம் தேதி) முதல் 13-ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பஸ்களுடன் 5,736 சிறப்பு பஸ்கள் என நான்கு நாட்களுக்கும் 14,104 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து 4 நாட்களுக்கு 7,800 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 21,904 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 15-ம் தேதி முதல் 19-ம் வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,460 பஸ்களுடன் 5,290 சிறப்பு பஸ்களும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுபோல, கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும். மாதவரம் பஸ் நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலைக்கும் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக போலீசார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14436 என்ற 24 மணி நேர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண், 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். ஆம்னி பஸ்களை கண்காணிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தேவையான அளவில் பஸ்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,87,330 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.