திருப்பாவை பாசுரம் 22
திருப்பாவை பாசுரம் 22 அங்கண்மா ஞாலத்து..
“கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?”
பாசுரம்
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
பாசுர விளக்கம்
அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி உன் கண்கள் சிறுது சிறுதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ?
சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல உன்னுடைய அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்