திருப்பாவை பாசுரம் 15
திருப்பாவை பாசுரம் 15
.
.
பாசுரம்:
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
.
.
விளக்கவுரை:
“இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே! இது என்ன! இத்தனை பெண் பிள்ளைகள் சேர்ந்து வந்த பின்பும் தூங்குகின்றாயோ?”
.
என்று எழுப்ப வந்தவர்கள் கேட்க
.
“பெண்களே! இதோ புறப்பட்டு வருகிறேன்; வெடுக்கு வெடுக்கென்று அழைக்கவேண்டாம்”
.
என்று வீட்டுக்குள் உள்ள தோழி விடைசொல்ல
.
“நீ வக்கணையாக பேசுவதில் வல்லவள் (வல்லமை உடையவள்), உனது இட்டுப் பேசும் ஆற்றலையும், உன் வாய்த்திறமையையும் நெடுநாளாகவே
நாங்கள் அறிவோம்”
.
என்று எழுப்ப வந்தவர்கள் சொல்ல
.
“இப்படிச் சொல்லுகிற நீங்கள் தான் பேச்சில் வல்லமை உடையவர்கள்
இல்லாவிட்டால், நீங்கள் செல்லுகிறபடி எல்லாமும் நான்தான் என்று வைத்துக்கொள்ளலாம் !
.
என்று வீட்டுக்குள் உள்ள தோழி சொல்ல
.
தனியே உனக்கு மட்டும் வேறு என்ன வேலை
.
என்று எழுப்ப வந்தவர்கள் கேட்க
.
வரவேண்டியவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்களா?
.
என்று வீட்டுக்குள் உள்ள தோழி கேட்க
.
எல்லோரும் வந்துவிட்டார்கள் ! நீ எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக்கொள்
.
என்று எழுப்ப வந்தவர்கள் கூறி
.
குவலயாபீடமென்னும் வலிமையான யானையைக் கொன்றொழித்தவனும்,
எதிரிகளான கம்சன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களை மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்,
மாயங்கள் செய்ய வல்லவனுமான,
கண்ணபிரானை,
பாடுவதற்காக நீ விரைந்து எழுந்து வா !
.
என்று எழுப்ப வந்தவர்கள் கூறி முடிக்கிறார்கள்
.
ஏற்றுக்கொள், நினைவில் கொள் எங்கள் தோழியே.