இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.12.2024)

இஸ்ரோ உருவாக கார்ணமான விக்ரம் சாராபாய் நினைவு தினமின்று

அகமதாபாத்தில் 1919ம் ஆண்டு பிறந்த இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். செல்வ செழிப்பான குடுபத்தில் இவர் பிறந்திருந்த போதிலும், இயற்பியலில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆராய்ச்சியாளராக தன்னை வடிவமைத்துக் கொண்டார். நவம்பர் 11, 1947ன் அன்று, பிசிக்கல் ரிசர்ச் லேப்ரட்டரி என்ற ஆராய்ச்சி மையத்தை தன்னுடைய 28வது வயதில் அகமதாபாத்தில் துவங்கினார். பின்னாளில் இவர் தான், இந்தியாவிற்கு விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று தேவை என்பதை இந்திய அரசாங்கத்திற்கு விளங்க வைத்தவர். நேசனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் (Indian National Committee for Space Research) என்று அந்நாளில் அழைக்கப்பட்ட இஸ்ரோவை 1962ம் ஆண்டு நிறுவினார் விக்ரம் சாராபாய்.அவருக்கு அந்நாட்களில் மிகவும் பக்கபலமாக இருந்தார் ஓமி யேகாங்கிர் பாபா. இந்திய அணுக்கருவியலின் தந்தை என அழைக்கப்படும் இவரின் உதவியால் இந்தியாவின் முதல் ராக்கெட் ஸ்டேசன் உருவாக்கப்பட்டு, சோடியம் ஆவி பேலோடுடுடன் கூடிய விமானத்தின் சோதனை முயற்சி வெற்றி வெற்றது. இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டாவை உருவாக்கியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அவர் இறந்த பின்பு நான்கு வருடங்கள் கழித்தே அந்த செயற்கை கோள் ரஷ்யாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. அவருடைய நினைவால் தான் தற்போது சந்திராயனில் பொருத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் என்று பெயர் இடப்பட்டுள்ளது.

நம்மாழ்வார் நினைவு நாள்:

நம் காலத்தின் வழிகாட்டி! இடுப்பில் பச்சை வேட்டி, சட்டையில்லாத வெற்றுடம்பு, பாசாங்கற்ற பளீர் சிரிப்பு, யாருடனும் எளிதாக உரையாடும் இயல்பு. இதுதான் நம்மாழ்வாரிடம் என்னை நெருங்க வைத்தது. பார்த்த உடனே சாப்பிட்டுக்கொண்டிருந்த கொய்யாப்பழத்தைப் பாதியாய் நறுக்கித் தந்து, நெகிழச் செய்தது! “சாப்பிடுங்க… ஆப்பிள் பழத்தைவிட இதில் சத்து அதிகம். நமது மண்ணில் விளையும் ஒரு நெல்லிக்கனியைவிட ஊட்டச்சத்து மிக்க பழத்தை இறக்குமதி செய்ய முடியாது! எள்ளில் ஆட்டி எடுக்கும் நல்லெண்ணையைவிட பன்னாட்டு கம்பெனிக்காரன் கூவிக்கூவி விளம்பரப்படுத்தும் ஆலிவ் எண்ணெயில் ஒன்றுமில்லை! இப்போதிருந்தே துரித உணவைக் கைவிடுங்கள். அவசர கதியில் ஆக்கிக்கொட்டும் இந்த உணவால் நம்ம நிலத்துக்கும் கேடு! உங்கள் உடம்புக்கும் கேடு!” என்றார். முதல் சந்திப்பில் ஒருவருடன் ‘உணவு அரசியலை’ இவ்வளவு எளிமையாக யாரும் பகிர்ந்துகொள்ள முடியாது. நம்மாழ்வார், தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் உரைத்தார். புத்தகங்கள் பல எழுதியவர். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியுள்ளது. இன்று தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில் நம்மாழ்வரின் முப்பதாண்டு கால உழைப்பு உள்ளது. அவர் தொடங்கிய ‘வானகம்’ எனும் அமைப்பு, உயிர்ச்சூழல் நடுவமாய் உலக உணவுப் பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையமாய் செயல்பட்டுவருகிறது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சென்றிருந்தபோது, உடல் நலக்குறைவால் நம்மாழ்வார் இயற்கையோடு இணைந்தார். சுற்றுச்சூழல், இயற்கை வழி வேளாண்மை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டுமெனில் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை இணைத்துப் போராடுவதன் மூலமே நம்மாழ்வாரின் கனவுகளை நனவாக்க முடியும். மற்றபடி மண்ணில் நெளியும் ஒரு புழுவில், பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகில், பறந்து திரியும் ஒரு பறவையின் குரலில் நம்மாழ்வார் எப்போதும் இருப்பார்.

நடனக்கலைஞர் – சந்திரலேகா பிரபுதாஸ் படேல் காலமான தினம்

ஒரு விதிவிலக்கான பரதநாட்டிய நடனக் கலைஞர்! சந்திரலேகா ஒரு நடனக் கலைஞர் என்று வர்ணிக்கப்படுகிறார்! அவர் ஒரு பல்துறை ஆளுமையாக அங்கீகரிக்கப்பட்டவர் மற்றும் நடனம், நடனம், கண்காட்சிகள், சுவரொட்டிகள், லோகோக்கள், கிராபிக்ஸ் வடிவமைத்தல் மற்றும் வளர்ச்சி மற்றும் பெண்ணிய குழுக்களுடன் பட்டறைகளை நடத்தினார்! அவர் கவிதைகள், தடங்கள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார், பரவலாக பயணம் செய்தார் மற்றும் மிகவும் அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான வழியில் ‘வாழும் கலைக்கு’ தன்னை அர்ப்பணித்துள்ளார்! கலையைப் போலவே வாழ்க்கையும் இன்றியமையாத ஒரு பெண்ணாக அவர் வெளிப்பட்டுள்ளார். அவர் நடன மொழியில் புதிய தளத்தை உடைத்தது மட்டுமல்லாமல், குடும்பம், திருமணம் மற்றும் தாய்மை ஆகிய நிறுவனங்களை நிராகரிப்பதன் மூலம் “இந்தியப் பெண்மை” நெறிமுறைகளை எதிர்த்துள்ளார்.

தானே புயல்

தமிழகத்தின் கடலூர் மற்றும் புதுவை கடற்கரை கிராமங்களை புரட்டிப் போட்ட நாள். . மணிக்கு நூற்று நாற்பது கிலோமீட்டர் வேகத்துடனான சூறைக்காற்றுடனும் மிகக் கடுமையான அடைமழையுடனும் தானே புயல் அன்றைய தினம் அதிகாலை கரையைக் கடந்தது கடலூர் மாவட்டத்தில் ஒன்பது பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும், சென்னையில் இரண்டு பேரும் உயிரிழந்தனர் கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டன. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட தானே புயல் பாதித்து 14ஆம் ஆண்டான இன்றும் விவசாயம், வீடுகள், வாழ்வாதராம் என அனைத்தையும் இழந்த மக்கள் இப்போதும் மீண்டு வர முடியாமல் தவித்து வருவோர் பலருண்டு. குடிசை இல்லா மாவட்டமாக மாற்ற 90 ஆயிரம் பசுமை வீடுகள் திட்டம், புதை மின் வழித்தட திட்டம், விவசாயிகளுக்கு என்று பல சலுகைகள், தானே புயலுக்கு என்று அமைக்கப்பட்ட செயல் திட்ட அலுவலகம் என எல்லாமே முடங்கி போய் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை எல்லாம் தாண்டி இப்புயல் பேரைச் சொல்லி அப்பளக் கம்பெனி தன் வாசகர்களிடம் இருந்து வசூல் செய்த தொகையில் அப்பளவாளே கணிசமாக ஆட்டைய போட்டதாக இன்றும் சொல்வோருண்டு.

1943ஆம் ஆண்டு இதே நாளில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவுகளிலிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தை ஜப்பானிய படைகள் விரட்டியடித்தனர். பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்பட்டதை இந்தியாவின் ஒரு பகுதி விடுதலை பெற்றதாக நேதாஜி அறிவித்து இந்தியக் கோடியை ஏற்றினார். ஆனால், இதனை காந்திஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. அந்தமானில் ஒரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு பதில் வேறு அந்நிய ஆக்கிரமிப்பு வந்துள்ளது. அதனை விடுதலையாக ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.

முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம் (1906).

1906 டிசம்பரில் இந்தியாவெங்கிலும் இருந்து முஸ்லீம்கள், முஸ்லிம் கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்கா நகரில் கூடியிருந்தனர். இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட டாக்காவைச் சேர்ந்த நவாப் சலி முல்லா என்பவர் முஸ்லீம்களின் நலன்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1906 டிசம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசைப் போலவே, அவர்களும் ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தி பிரிட்டிஷ் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர். தொடக்கத்தில் பிரிட்டிஷார் இதற்கு ஆதரவு காட்டினர். மின்டோ மார்லி சீர்திருத்தங்களின் போது முஸ்லிம்களுக்கென தனித்தொகுதியை கேட்டுப்பெற்றார்கள்.

புலம்பெயர் எழுத்தாளர் ப. சிங்காரம் நினைவு நாள்

டிசம்பர் 30, 1997, இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் கழித்தவர். சிங்காரம், 1950இல் இந்தியா திரும்பியவுடன் “கடலுக்கு அப்பால்” என்கிற புதினத்தை எழுதினார். இதை வெளியிடுவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. இவருடைய நண்பர் மூலமாக இந்தப் புதினம், கலைமகள் பதிப்பகத்திற்கு போட்டிக்காக அனுப்பப்பட்டது. போட்டியில் இந்தப் புதினம் முதல் பரிசை வென்றது. இறுதியில் கலைமகள் பதிப்பகத்தின் வழியாக 1959இல் “கடலுக்கு அப்பால்” புதினத்தை வெளியிட்டார். இவர், இரண்டே இரண்டு புதினங்களை மட்டுமே எழுதியிருந்தாலும், மிகச் சிறந்த புதின எழுத்தாளராக அறியப்படுகிறார். இவரின் “புயலிலே ஒரு தோணி” புதினம் எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு எழுதப்பட்ட புதினம் என்று தமிழ் இலக்கிய அறிஞர்களால் பாராட்டப்படுகிறது. 1997இல், தனது வருமானங்களை சமூக நல அறக்கட்டளைக்கு வழங்கினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார். அதே வருடத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மரணமுற்றார் . அவர் இறந்ததைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டாராக்கும்.

1924 – நம் சூரியக்குடும்பம் அமைந்துள்ள பால்வீதி மண்டலத்திற்கு வெளியிலும், விண்மீன் மண்டலங்கள்(கேலக்சிகள்) உள்ளன என்பதை முதன்முறையாகக் கண்டறிந்து, எட்வர்ட் ஹப்பிள் அறிவித்த நாள்

அதுவரை, பால்வீதி மண்டலம்தான் ஒட்டுமொத்த அண்டமுமே என்றுதான் மனிதர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்! பால்வீதி மண்டலத்திற்கு வெளியே தென்பட்டவற்றை, சுருள் நெபுலாக்கள் என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தார்கள். விண்ணில் தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட அயனியாக்கப்பட்ட வாயுக்கள் ஆகியவற்றாலான மேகங்கள்தான் நெபுலா என்றழைக்கப் பட்டன. நெபுலா என்ற லத்தீன் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள். நெபுலாவிலிருந்து பல புதிய விண்மீன்கள் உருவாகும் என்றாலும், நமக்கு அருகாமை மண்டலமாக உள்ள ஆண்ட்ரமீடா உள்ளிட்ட மண்டலங்களையே அதுவரை நெபுலாக்களாகத்தான் கருதியிருந்தார்கள். 1919இல் கலிஃபோர்னியாவிலுள்ள மவுண்ட் வில்சன் அப்சர்வேட்டரியில் (அப்போது)உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான 100 அங்குல ஹூக்கர் தொலைநோக்கியை நிறுவும் பணி முடியும்போது, ஹப்பிள் அங்கு பணியில் சேர்ந்தார். கேலக்சியிலிருந்து தொலைவை அளக்க உதவும் செஃபீயிட் வேரியபிள் என்ற துடி விண்மீன் வகையைச் சேர்ந்த விண்மீன்களை இத்தொலைநோக்கி மூலம் ஹப்பிள் கண்டறிந்தார். அந்த அளவீடுகளைப் பயன்படுத்தி, இந்த நெபுலாக்கள் என்றழைக்கப்பட்டவை நெடுந்தொலைவில் இருப்பதையும், அதனால் அவை பால்வீதி மண்டலத்தின் பகுதிகளாக இருக்க முடியாது என்பதையும் அவர் கண்டறிந்தார். அவை நம் கேலக்சிக்கு வெளியே உள்ளவை என்று ஹப்பிள் 1924இல் அறிவித்ததைத்தான், 1755இலேயே ‘ஹிஸ்ட்டரி ஆஃப் நேச்சர் அண்ட் தியரி ஆஃப் த ஹெவன்ஸ்’ நூலில் இம்மானுவேல் காண்ட், கருதுகோளாகக் குறிப்பிட்டிருந்தார் என்பதும், அது அன்றைய வானியலாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹப்பிளின் முடிவுகளும் எதிர்க்கப்பட்டதுடன், 1929வரை ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஏராளமான கேலக்சிகளைக் கண்டுபிடித்திருந்த ஹப்பிள், அவற்றிற்கிடையேயான தொலைவுகுறித்த ஹப்பிள் விதியையும் உருவாக்கியிருந்தார். ஹப்பிளின் கண்டுபிடிப்பு, அண்டம் என்பதைக் குறித்த அறிவியல் பார்வையின் அடிப்படையையே மாற்றியமைத்தது. எக்ஸ்ட்ரா-கேலக்டிக் ஆஸ்ட்ரானமி என்ற புதிய துறையாகவே உருவாகிய இது, 2016 நிலவரப்படி, நம்மிடம் இருக்கும் கருவிகளைக்கொண்டு பார்க்க முடிந்த தொலைவுவரை, 2 லட்சம் கோடி கேலக்சிகளும், அவற்றில் ஆயிரம் கோடி கோடி கோடி விண்மீன்களும் இருக்கலாம் என்று கணித்துள்ளது. கேலக்சியாஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு பாலைப் போன்ற என்று பொருள். நம் பால்வீதி மண்டலத்தையொட்டி ஏற்பட்ட இப்பெயரே இன்று அனைத்து மண்டலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

‘கேட்ஸ்டன் கொள்முதல்’ நிகழ்வு நடைபெற்ற நாள்

1853 – இருப்புப்பாதை அமைப்பதற்குத் தேவைப்பட்டதால், மெக்சிகோவிடமிருந்து, 76,800 ச.கி.மீ. இடத்தை 10 மில்லியன் டாலர்களுக்கு அமெரிக்கா வாங்கிய, ‘கேட்ஸ்டன் கொள்முதல்’ நிகழ்வு நடைபெற்ற நாள் இதற்கான ஒப்பந்தத்தில் மெக்சிகோவுக்கான அமெரிக்கத் தூதரான ஜேம்ஸ் கேட்ஸ்டன் கையெழுத்திட்டு, இடத்தைப் பெற்றுக்கொண்டதால் இது கேட்ஸ்டன் கொள்முதல் என்று அழைக்கப்படுகிறது. 1846-48இல் நடைபெற்ற மெக்சிகோ அமெரிக்கப் போரைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் நிலவிவந்த எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் இந்த இடம் வாங்கப்பட்டது. மெக்சிகோ குடியரசின் ஒரு மாநிலமாக இருந்த டெக்சாஸ் பகுதியின் மக்கள், ஒரு புரட்சியை நடத்தி 1836இல் தனிக் குடியரசாகப் பிரிந்தனர். அமெரிக்காவுடன் இணைய விரும்பிய இவர்களை அமெரிக்கா 1845இல் 28ஆவது மாநிலமாக இணைத்துக்கொண்டது. ஆனால், இன்னும் டெக்சாசை தங்களின் ஒரு மாநிலமாகவே கருதிவந்த மெக்சிகோ, சில பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது போர் மூண்டது. போரில் மெக்சிசோ தோற்க, டெக்சாசின்மீதான அதிகாரத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தியது. இப்பகுதியிலிருந்தவர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்பதாலேயே அமெரிக்காவுடன் இணைய விரும்பிய நிலையில், அதற்கு பசிபிக் கடற்பகுதியுடன் இணைக்கும் இருப்புப்பாதை அமைப்பது முக்கியமானதாக இருந்தது. ஆனால், இப்பகுதி இருப்புப்பாதை அமைக்க முடியாத அளவுக்கு மலைப்பிரதேசமாக இருந்த நிலையில், அதிகத் தொலைவு பயணிக்காத பாதை அமைக்க மெக்சிகோவின் வடபகுதியில் உள்ள இந்தப் பகுதி உகந்ததாக இருக்கும் என்பதால் இதை அமெரிக்கா கேட்டாலும் மெக்சிகோ விற்பதற்குத் தயாராக இல்லை. ஆனால், அமெரிக்கா கொடுத்த நெருக்கடியாலும், போரின் தோல்வியால் மெக்சிகோ அரசின்மீது நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவையாலும் இதற்கு மெக்சிகோ ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு வாங்கப்பட்ட பகுதி தற்போதைய அரிசோனா, நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களின் பகுதியாக உள்ளது.

தூ யூயூ பிறந்ததினம். (Tu Youyou பிறப்பு:

30 டிசம்பர் 1930), சீன மருத்துவ அறிவியலாளரும், மருந்தாக்க வேதியியலாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் மலேரியாவைக் குணப்படுத்த ஆர்ட்டெமிசினின் என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தவர் தூயூயூ மலேரியாவுக்கான இச்சிகிச்சை முறை 20 ஆம் நூற்றாண்டின் வெப்பமண்டல மருத்துவத்தில் ஒரு பெரும் சாதனை எனக் கருதப்படுகிறது. இவரது இக்கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசின் பாதித்தொகை இவருக்கும், மீதமான தொகை ஒட்டுண்ணியால் ஏற்படும் நோயைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடித்தமைக்காக வில்லியம் சி. கேம்பல், சத்தோசி ஓமுரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...