இன்று விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். இவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
இந்த விண்கலன்கள் புவியில் இருந்து 476 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட உள்ளன. சில மாதங்களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இது தவிர ராக்கெட் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள சூழலில், தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது பற்றி தமிழக மீன்வள துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.