உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!

 உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!

இந்தியாவின் எல்லையில் இருக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும். இது உலகின் மிக நீண்ட நதிகளில் ஒன்று. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர் ஆகும். திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திரா தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது.

இதற்கு முன்பு மிகப் பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டிருந்த நிலையில் இதன் மூலம் உலகின் மிகப் பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்தது. இதையடுத்து திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என கணிக்கப்படுகிறது. சீனாவின் இந்த முடிவு பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளான இந்தியா, வங்கதேசம் ஆகியவற்றுக்குச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தும்போது, சர்வதேசப் பிரச்சினையாக மாறலாம். பிரம்மபுத்திரா நதி நீரை நம்பியிருக்கும் நாடுகள் நலனுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும் என ஏற்கெனவே சீன அரசிடம் இந்திய அரசு சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சீனா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சீனா சார்பில் திபெத்தில் 1500 கோடி டாலர் மதிப்பில் ஜாங்மு நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சீனா 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட முடிவு செய்துள்ளது. சீனா அணை கட்டிவிட்டால் பிரம்மபுத்திரா நதி மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடும். மேலும் எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது. இதற்கிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா மீது இந்தியா அணை கட்டுவது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...