இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் “நல்லக்கண்ணு”வின் 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா இன்று (டிச. 26) சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமென்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாள் விழாவின் போது நாம் கூடுவதுண்டு, அவரை இதே இடத்தில் வாழ்த்துவதுண்டு. அதே போல் நான் இங்கு வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், அவரை நான் வாழ்த்த இங்கு வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதி, சமத்துவத்தை நிலை நாட்டுவதோடு, இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் வரும் திட்டங்களுக்கு எல்லாம் உறுதுணையாக பக்கபலமாக விளங்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய நல்லக்கண்ணு தான். அவர், அமைதியாக அடக்கமாக அதே நேரத்தில் ஆழமாக எதையும் சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்ட அவரை உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
தொடர்ந்து, எங்களை போன்ற இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்று திமுக சார்பிலும், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மதச்சார்பின்மை கூட்டணி சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 அல்ல 200க்கும் மேற்பட்ட இடங்களையும் கைப்பற்றும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி கொள்கை கூட்டணியாக மட்டுமல்லாமல், நிரந்தர கூட்டணியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.