மரியாவின் அமல உற்பவப் பெருவிழா 👆🏼- டிசம்பர் 8
மரியாவின் அமல உற்பவப் பெருவிழா 👆🏼- டிசம்பர் 8
✝இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். அதாவது தூய கன்னி மரியாள் மாசற்றவர், “அமல உற்பவி‘ என்ற பேருண்மையை திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் கடந்த 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் இவ்வுலகிற்கு அறிவித்தார். இந்தப் பேருண்மை 1858ம் ஆண்டு மார்ச் 23ல் லூர்து நகரில் மசபியேல் குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு “நானே அமல உற்பவம்“ என்று கன்னி மரி அன்னை கூறியதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்டது.
கத்தோலிக்க விசுவாசிகளது பல்லாயிரம் வருடகால நம்பிக்கையை, 1854ம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பத்திநாதர், “மரியா உற்பவித்த நொடியில் இருந்தே வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், இயேசுக்கிறிஸ்துவின் பேறுபலன்களினாலும் பிறப்பு நிலைப் (சென்ம) பாவத்தின் கறைகளி லிருந்து பாதுகாக்கப்பட்டார்” என்ற விசுவாசக் கோட்பாடாக வெளியிட் டதாக திருச்சபையின் வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
கன்னி மரியாள், தூய்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். மாசற்றவர், “அமல உற்பவி“ இறை மகனின் தாயாகும் பேறு பெற்றவர். எல்லாம் வல்ல இறைவனின் மீட்புத் திட்டத்தில் சிறப்பிடம் வகிப்பவர் என்று, திருச்சீடர்கள் காலத்திலிருந்தே கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசிகள் காலங் காலமாக நம்பிய விசுவாச உண்மையென அன்னையாம் திருச்சபை சான்று பகருகின்றது.
பாவ மாசுமறுவற்று கருவுறும் நிலையை “அமல உற்பவம்“ என்கிறார்கள். தூயகன்னி அன்னை மரியாள் கருவுற்றபோது அவர் ஜென்ம பாவத்தின் பிடியில் சிக்கவில்லையென திருச்சபை படிப்பிப்பதனையே அன்று நசரேத்தூரில் “அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்“ என்று (லூக்கா1:28) கபிரியேல் தூதர் வாழ்த்தியதாக நற்செய்தி சான்றளிக்கின்றது.
கன்னி மரியாள் ஜென்ம பாவத்தின் பிடியில் சிக்காத, பாவக்கறை படியாத நிலையில், அமல உற்பவியாக மனுக்குலத்தை மீட்கும் இறை திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டாள். தந்தையாம் கடவுள் தனது படைப்பான மனிதனோடு கொண்டுள்ள உறவைச் சீர்செய்ய கன்னி மரியாளைக் கருவியாகவும், பாலமாக வும் பயன்படுத்தினார். எல்லாம் வல்ல பரலோக தகப்பனால் சிறப்புரிமை பெற்றவளாக அன்னை மரியா தெரிந்தெடுக்கப்பட தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரதும் பங்குண்டென்பதே நம்பிக்கையான விசுவாசம்.
மனிதன் பாவம் செய்தபோது இறை மனித உறவு பாதிக்கப்பட்டது. முறிந்த உறவைப் புதுப்பிக்க, புதிய ஆதாமாக இறை மகன் கன்னி மரியாவின் வயிற்றில் கருத்தரித்ததால், இறைவனது மீட்புத் திட்டத்தை கன்னி மரியாளும், இறைமகன் இயேசுவும் பற்றுறுதியோடு செய்து முடித்ததாக நாம் விசுவசிப்பது எமது பெரிய பாக்கியமாகும்.
தூய கன்னி அன்னை மரியாளைப் போல நாமனைவரும் அமல உற்பவிகளாகப் பிறக்கா விடினும். எங்களாலும் மாசற்றவர்களாக வாழமுடியுமான ஆற்றலை, நாம் பெற்றுள்ள திருமுழுக்கால் பரிசுத்த ஆவியாரின் வழியாக உரிமைப் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம் (கலாத்தியர்(4:4-7) என்பதனை புனித பவுலடிகள் தெரிவிக்கின்றார். 🙏🏼