தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்
தமிழ் இதழியல் உலகில் தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.😢
நேற்றைய தினம் ஒரு யூ டியூப் சேனல் சார்பாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் கதை யாருடையது என்று கேட்ட போது ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை என்பதுதான் காலத்தின் கோலம்
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி” தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. கல்கியின் இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி.
எஸ் எஸ் வாசன் 200 கொடுத்து வாங்கி நடத்த ஆரம்பித்த ‘ஆனந்தவிகடன்’ இதழி ‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை எழுதி அனுப்பினார். அதை‘கல்கி’ என்ற புனைப்பெயரில் வாசன் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார். பின்னர் தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற பெயர்களிலும் எழுதி வந்தார்.
ஆனந்த விகடனிலிருந்து விலகிய கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம் அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ‘கல்கி’ பத்திரிகையை 1941இல் நிறுவினார். இதன் பிறகு இவர் கல்கி என்றே அறியப்பட்டார். ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்ந்து இவரது நாவல்கள் பிரசுரம் கண்டன. கல்கி மிகவும் பாப்புலரான எழுத்தாளராக உருவெடுத்தார். தொடராக கல்கியில் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் போன்று வெளிவந்த நாவல்கள் வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. கல்கி தமிழ் வாசகர்களிடையே ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தலைசிறந்த வெகுஜன எழுத்தாளராக மதிக்கப்பட்டார்.
இடையில் ‘மீரா’ திரைப்படம் 1945இல் வெளிவந்து மிகவும் புகழ் பெற்றது. கதை, வசனம் கல்கி. அதோடு இப்படத்தில் சில பாடல்களும் எழுதினார். குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்‘ இம்மியளவும் சுவை குன்றாமல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பெற்று, இன்றளவும் சாகாவரம் பெற்ற பாடலாகத் திகழ்ந்து வருகிறது.
இன்றளவும் முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட கல்கி 55-வது வயதில் இதே டிச 5இல் (1954) மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன