நான் சிரித்தால்: சினிமா விமர்சனம்

 நான் சிரித்தால்: சினிமா விமர்சனம்
அறிமுக இயக்குனர் ராணா, தான் ஏற்கனவே குறும்படமாக எடுத்து, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கெக்க பிக்க’ படத்தை இப்போது முழு நீள படமாக உருவாக்கியிருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் காந்திக்கு (ஆதி) ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் தாங்கமுடியாமல் சிரிப்பு வந்துவிடும். இந்த நிலையில், அவர் தனது பட்டப் படிப்பையே முடிக்காததால், ஐடி நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதனால், அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது.

இதற்கிடையில், சக்கரை (ரவி மரியா) – தில்லிபாபு (கே.எஸ். ரவிக்குமார்) என்ற இரண்டு தாதாக்கள் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார்கள். தில்லிபாபுவைக் கொல்ல சக்கரை மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்க, அவர்கள் செல்ல வேண்டிய கார் மாறிப்போவதால், காந்தியும் அவனது நண்பர்களும் தில்லிபாபுவிடம் சிக்குகிறார்கள். தாதாக்களிடமிருந்து காந்தி எப்படி தப்பித்தார், காதல் கைகூடியதா என்பது மீதிப் படம்.
‘கெக்க பிக்க’ விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ஒரு குறும் படம். ஆனால், அந்தக் கதையையே முழு நீளப் படமாக பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. படம் துவங்கும்போது, டைட்டில் கார்டுகளின் பின்னணியிலேயே தாதாக்களின் மோதல் குறித்து சொல்கிறார்கள். ஆகவே, தாதாக்களின் மோதல்தான் பிரதானமாக இருக்குமோ என்று நினைக்கும்போதே, கதாநாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சிகளும் பாடல்களும் வருகின்றன. ஆக, அந்தக் காதலும் அதில் வரும் பிரச்சனைகளும்தான் படமோ என்று நினைக்கையில், கதாநாயகனுக்கு இந்த சிரிக்கும் பிரச்சனை வருகிறது. வேலையும் போய்விடுகிறது.

பிறகு, சிரிக்கும் பிரச்சனையை வைத்து படம் சிறிது நேரம் நகர்கிறது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தாதாக்கள் மோதலை நோக்கி நகர்கிறது படம். இப்படி, கதையின் மையம் மாறிக்கொண்டே இருப்பதுதான் திரைக்கதையின் பெரிய பிரச்சனை. கதாநாயகனுக்கு வரும் விசித்திரமான பிரச்சனையை வைத்து ஒரு முழு நீள காமெடி படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், ஒரு சில காட்சிகளைத் தவிர, பெரும்பாலான காட்சிகள் மெல்லிய சிரிப்பைக்கூட ஏற்படுத்துவதில்லை. ஒரு காட்சியில் பாண்டியராஜன் (இவர் இந்த ஒரு காட்சியில் மட்டும்தான் வருகிறார்) கதாநாயகனைப் பார்த்துக் கேட்கிறார்:

‘ஒரு ஜோக் சொல்லட்டுமா?’

‘சொல்லுங்க.’

‘ஜோக்.’

ஒரு நகைச்சுவைத் திரைப்படத்திற்கு இவ்வளவு பழைய கடி ஜோக்குகளையா வசனங்களாக எழுதுவார்கள்?
படத்தில் பெரிதாக நகைச்சுவை ஒர்க் – அவுட் ஆகவில்லையென நினைத்தார்களோ என்னவோ, இடைவேளைக்குப் பிறகு, படம் முடிவை நெருங்கும்போது யோகி பாபு படத்தில் நுழைகிறார். ஆனாலும் அவரது காமெடியும் சிரிப்பை வரவழைக்கவில்லை. இவ்வளவையும் தாங்கிக்கொண்ட நம்மால், கடைசியில் கதாநாயகன் சொல்லும் நீண்ட அறிவுரையைக் கேட்கும்போது….. முடியல.

கதை – திரைக்கதையிலேயே இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது, படத்தில் வரும் ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்கள், தம் தாங்கும் திறனை வெகுவாக சோதிக்கின்றன. 
படத்தில் நடித்திருக்கும் ஆதி முதல் ரவி மரியா வரை சிறப்பாகவே நடிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? கதாநாயகனுக்கு இருக்கும் பிரச்சனையைப் போல, சிக்கலான நேரத்தில் சிரிக்கும் நோய் இருந்தால்தான் சிரித்து ரசிக்க முடியும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...