இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.12.2024)

`உலக மண் தினம்’

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் தேதி `உலக மண் தினம்’ உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குறைந்து வரும் மண்வளம், மண் மாசுபாடு இவற்றால் எதிர்கால தலைமுறை சந்திக்கப்போகும் சவால்களைக் கருத்தில் கொண்ட தாய்லாந்து மன்னர் பூமி பால் முயற்சியால் இந்த நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர்.இவ்வாறு அமைவதற்க்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன.இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர்.

மண் என்பது,உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான முக்கிய அங்கமாக விளங்குகிறது. முக்கியத்துவம் வாய்ந்த மண்ணின் வளத்தை சமீப காலமாக அழித்துக்கொண்டு வருகிறோம்.

மண்ணின் அழிவுகள்;-

விவசாயத்தில்,பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை முழுமையாக பாதிக்கிறது. மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்து, நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி, மண் மலட்டுத் தன்மையை பெறுகிறது.

ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் பாலித்தீன் கவர்கள், மண்ணுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது.

மண்ணின் களர்த்தன்மை மற்றும் உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும். அவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, அம்மண்ணின் வளத்தை மாற்றலாம். இரசாயன உரங்களை இடுவதினால், நல்லத் தரமான மண்ணின் இயல்பும் சீர் கெடுகிறது.

மண்ணில் மக்கிப்போகாமல் இருக்கும் பாலித்தீன் கழிவு, மழைநீரை மண்ணுக்குள் இறங்க விடாமல் தடுத்து, மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் மாசடையச் செய்கிறது.இந்நிலையில், சொற்பமான அளவிலான விவசாயிகள், ரசாயன உரத்தை முற்றிலும் புறந்தள்ளி, மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மை பயக்கும்,

இயற்கை மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.

விவசாயிகளின் இந்த முயற்சி மண் வளத்தை காப்பதற்கான அச்சாரமாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் ரசாயன உரங்களையே பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் ரசாயன உரத்தின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை கைவிட வேண்டும்.

பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது, பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. மண்பரிசோதனை மூலம் மண் வளத்தினைக் கண்டறியலாம்.

தாவரத்திற்க்கு மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது.எனவே, உலகளாவிய அளவில் மண்ணின் மகத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் அதன் வளத்தை காக்க வேண்டுமென அனைவரும் உறுதியேற்று, மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் தலையான கடமையாகும்.

உலக தன்னார்வலர் தினம் டிசம்பர் 5. (International Volunteer Day) 

பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் (International Volunteer Day) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. இந்நாள் உள்ளூரிலும், சரவதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தன்னார்வப் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது.

பன்னாட்டுத் தன்னார்வத் தொண்டர் நாள் அரசு சார்பற்ற அமைப்புகள், சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்களினாலும் நினைவுகூரப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் திட்டத்தினாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக நம் ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் இருந்து சில சேதிகள

தமிழ்நாட்டில் தன்னார்வலர்களாக செயல்பட விரும்புவோர் எண்ணிக்கை 27 சதவீதம்

ஆண்களை விட பெண்களே தன்னார்வலராக செயல்பட விரும்புகிறார்கள்

இளந்தலைமுறையினரிடம் அவ்வளவாக ஆர்வமில்லை

52 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே தன்னார்வத் தொண்டு செய்வதை விரும்புகிறார்கள்

46 சதவீதம் பேர் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தை வழங்கவே விரும்புகின்றனர்

62 சதவீதத்தினர் உள்ளூரில் சர்வீஸ் செய்யவே ஆர்வம்.

கன்னிமாரா_நூலகத்திற்கு ஹேப்பி பர்த் டே

கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 – 1902) என்பவராவார். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமா காட்சியளிக்கும் இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய ஆளுநர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார். “படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணலாம். கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது. இந்நூலகத்தின் வளர்ச்சி 1940-ல் தனி நிறுவனம் ஆகியது 1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது 1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது 1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று 1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று 1973-ல் புது கட்டடம் 1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது. கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம்! முன்னேற்றம்! தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப் படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.இப்போது கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது. 1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகையினரை இங்கு காணலாம்.

சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் (Arumuga Navalar) இறந்த தினம் இன்று (டிசம்பர் 5).

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார். சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில் உயர் கல்வி பயின்றார். தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார். சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர். யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.l வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின. சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார். சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார். தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர். ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவேண்டி இருந்தது. ஆங்கிலத்தில் பேச முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து, தமிழிலேயே பேசுமாறும், அதை நீதிமன்ற அதிகாரிதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறவேண்டும் என்றும் கூறினார். உடனே நாவலர், ‘‘அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’’ என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறிவிட்டார். ‘சரி சரி, ஆங்கிலத்திலேயே கூறுங்கள்’ என்று நீதிபதி சொல்ல, மறுத்த நாவலர், ‘சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்று தெரிவித்தாராம். 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் பெருமான் 57-வது வயதில் (1879) மறைந்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971 அக்டோபர் 29 இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் “யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற பெண் ஓவியர் அம்ரிதா சேர்கில் நினைவு தினம் இன்று.

இந்தியாவின் பிரிடா காலோ எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

அம்ரிதா சேர்கில் புடாபெசுடு நகரில் பிறந்தார். 1921 முதல் சிம்லா நகரில் வாழ்ந்து வந்தார். இளம் அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.ஓவியக் கலையில் மேலும் பயிற்சி பெற 1929 இல் பாரீசு நகருக்குப் போனார்.கவின் கலையில் இளங்கலைப் பட்டமும் பெற்று மேலை நாட்டு ஓவிய வகைகளையும் கற்றுக்கொண்டார்.

இளம்பெண்கள் என்ற பெயரில் அம்ரிதா சேர்கில் வரைந்த ஓவியம் மேலை நாட்டுப் பாணியில் அமைந்திருந்தது.

1934 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் இந்தியாவின் தொன்மைக் கலைகளிலும் இசுலாமிய ஓவியங்களிலும் ஆர்வம் காட்டினார்.

1937 இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மணப் பெண்ணின் அறை, பிரம்மச்சாரிகள், தென்னிந்திய கிராமிய வாழ்க்கை என்ற ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றன.

அஜந்தா குகை ஓவியங்களும், இந்திய மக்களின் எளிய வாழ்க்கை நிலைகளும், பெண்களின் நலிந்த வாழ்வும் அம்ரிதாவின் ஓவியங்களில் பதிவாகின.

1938 இல் கொரக்பூரில் வாழ்ந்தபோது இரவிந்திரனாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டார். அதன் விளைவாக வங்காளத்தில் நிகழ்ந்த கலைப்புரட்சியில் தாமும் இணைந்து கொண்டார்.

காந்தியக் கொள்கைகளிலும் அம்ரிதா நாட்டம் கொண்டார். 1941இல் லாகூரில் வாழ்ந்து வந்த அம்ரிதா ஒரு ஓவியக் கூடத்தை அமைத்தார். அங்கு ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில் 5 டிசம்பர் 1941 இல் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

அரவிந்தர் மறைந்த நாளின்று

“தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!’ இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர்.

கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது புதல்வராக பிறந்தார் அரவிந்த் கோஷ். பிறந்த ஆண்டு, 1872. இவரது தந்தை பெரும் வள்ளல். சில சமயங்களில், தன் குடும்பமே சிரமப்படும் அளவுக்கு, பிறருக்கு தானம் செய்து விடுவார். தந்தையைப் போலவே பிள்ளையும் நற்குணங்களுடன் வளர்ந்தார். மிகுந்த தைரியசாலி இவர்.

ஐந்து வயதில், டார்ஜிலிங் செயின்ட்பால் பள்ளியில் இவரது ஆரம்பக்கல்வி ஆரம்பமானது. அது, ஆங்கிலக் குழந்தைகள் படிக்கும் பள்ளி என்பதால், இளமையிலேயே ஆங்கிலம் அத்துப்படியானது. இரண்டு ஆண்டுகள் கடந்தன. அரவிந்தரை லண்டனிலுள்ள செயின்ட் பால் பள்ளியில் சேர்த்தார் அவரது தந்தை. பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலிய பாஷைகளைக் கற்றுத் தேர்ந்தார். 14 வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்.

ஐ.சி.எஸ்., படிப்பை முடித்த அவர், குதிரை சவாரி தேர்வில் வெற்றி பெறாததால், பெரிய பதவிகளுக்கு செல்ல முடியாமல் போய் விட்டது. எனவே, மகனை இந்தியா திரும்பும்படி சொல்லி விட்டார் தந்தை. அரவிந்தர் வந்த கப்பல் கடலில் மூழ்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட அவரது தந்தை, “மகன் இறந்து விட்டானே…’ என்ற அதிர்ச்சியில் காலமாகி விட்டார். அரவிந்தர் இந்த விபத்தில் தப்பித்தது, அவருக்குத் தெரியாது.ஊர் திரும்பிய அரவிந்தர், இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்டு, மிகவும் வருந்தினார்.

அரவிந்தரின் தாய்க்கும் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு, பிரமை பிடித்தவர் போல் இருந்தார். அரவிந்தரின் புலமை பற்றி கேள்விப்பட்ட பரோடா மன்னர் கெய்க்வாட், அவரை தன் அந்தரங்க காரியதரிசியாக நியமித்தார். பின்னர், பரோடா கல்லூரியின் முதல்வர் ஆனார். இந்த சமயத்தில் தான், அவர் தன் தாய்மொழியான பெங்காலியையே படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அவர் எழுதிய கட்டுரைகள், மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டன. இத்துடன் ஆன்மிக ஈடுபாடும் வளர்ந்தது. ஏப்ரல் மாதம், 1901ல், மிருணாளினி அம்மையாரை அவர் திருமணம் செய்து கொண்டார். அவரை ஆன்மிக வாழ்வில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார் அரவிந்தர்; அம்மையாருக்கோ அதில் ஆர்வமில்லை. ஒரு கட்டத்தில், இறந்து போனார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில், நீதிபதி ஒருவரைக் கொல்வதற்காக, இரண்டு இளைஞர்கள் குண்டு வீசினர். அவருடன் வண்டியில் பயணம் செய்த ஒரு பெண்ணும், அவரது மகளும் இதில் இறந்தனர். அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு என்று பிரபலமான இந்த வழக்கில், இந்த இளைஞர்களை தூண்டி விட்டது அரவிந்தர் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த சூழ்நிலை அவரையறியாமல் ஏதோ ஒரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போது, அவர் கண்களை மூடினார். “எல்லா இடத்திலும் நான் இருக்கும் போது பயம் எதற்கு?’ என்று கண்ணபிரான் சொல்வது போல் கேட்டது.

இதை அடுத்து கண்ணனைப் பற்றி கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்யப்பட்டார்.இதன்பிறகு, 1910ல் புதுச்சேரி வந்த அவர், முழுநேர ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அவரது ஆசிரமத்தில் நான்கு சீடர்கள் இருந்தனர். தவம், ஜபம் என நாட்கள் கழிந்தது. “ஆரிய’ என்ற பத்திரிகையை துவங்கி, அதில் ஆன்மிக விஷயங்களை ஏராளமாக எழுதினார்.

“மேலே உயர்த்துகிற ஒரு லட்சியத்தில் செயல்படுகிறேன். அந்த லட்சியம் நிறைவேறிய பிறகு, அதையே ஆதாரமாகக் கொண்டு செயல்படுவேன்…’ என்றார் அரவிந்தர். ஆம்… ஆன்மிகத்தில் உயர்நிலையை எட்ட வேண்டும் என்பது அவரது எண்ணம்.1926ல் அந்த எண்ணம் நிறைவேறியதும், சீடர்களைக் கூட பார்ப்பதைத் தவிர்த்து, தனிமையில் இருந்தார்.

இந்த சமயத்தில், அரவிந்தரை தரிசிக்க, பிரான்சில் இருந்து வந்த, “மிரா’ என்பவர் யோக சாதனைகளில் ஈடுபட்டார். அவரே ஸ்ரீ அன்னை என பெயர் பெற்றார். ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. நீண்டகாலம் ஆன்மிக சேவை செய்த அரவிந்தர், இதே டிச., 5, 1950ல் காலமானார்.

மனிதன் பிறந்ததே இறைவனை <<<உணரவும், அவரை அடையவுமே என்ற ஒப்பற்ற போதனையைப் போதித்த அரவிந்தரை, அவரது மறைவு நாளில் நினைவு கூறுவோம்.

தமிழ் இதழியல் உலகில் தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.😢

நேற்றைய தினம் ஒரு யூ டியூப் சேனல் சார்பாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் கதை யாருடையது என்று கேட்ட போது ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை என்பதுதான் காலத்தின் கோலம்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி” தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. கல்கியின் இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி.

எஸ் எஸ் வாசன் 200 கொடுத்து வாங்கி நடத்த ஆரம்பித்த ‘ஆனந்தவிகடன்’ இதழி ‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை எழுதி அனுப்பினார். அதை‘கல்கி’ என்ற புனைப்பெயரில் வாசன் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார். பின்னர் தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற பெயர்களிலும் எழுதி வந்தார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம் அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ‘கல்கி’ பத்திரிகையை 1941இல் நிறுவினார். இதன் பிறகு இவர் கல்கி என்றே அறியப்பட்டார். ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்ந்து இவரது நாவல்கள் பிரசுரம் கண்டன. கல்கி மிகவும் பாப்புலரான எழுத்தாளராக உருவெடுத்தார். தொடராக கல்கியில் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் போன்று வெளிவந்த நாவல்கள் வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. கல்கி தமிழ் வாசகர்களிடையே ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தலைசிறந்த வெகுஜன எழுத்தாளராக மதிக்கப்பட்டார்.

இடையில் ‘மீரா’ திரைப்படம் 1945இல் வெளிவந்து மிகவும் புகழ் பெற்றது. கதை, வசனம் கல்கி. அதோடு இப்படத்தில் சில பாடல்களும் எழுதினார். குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்‘ இம்மியளவும் சுவை குன்றாமல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பெற்று, இன்றளவும் சாகாவரம் பெற்ற பாடலாகத் திகழ்ந்து வருகிறது.

இன்றளவும் முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட கல்கி 55-வது வயதில் இதே டிச 5இல் (1954) மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

முதல் ஏலம் லண்டனில் நடத்தப்பட்ட நாள்

உலகின் மிகப்பெரிய ஏலநிறுவனம் என்று குறிப்பிடப்படும் க்றிஸ்ட்டீ’ஸ் நிறுவனத்தின் முதல் ஏலம், அதன் உரிமையாளரான ஜேம்ஸ் க்றிஸ்ட்டியால் லண்டனில் நடத்தப்பட்ட நாள் டிசம்பர் 5. ‘நான் அதிகமாக்குகிறேன்’ என்ற பொருளுள்ள, லத்தீன் சொல்லான ஆக்டம் என்பதிலிருந்துதான், ஏலம் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான ஆக்ஷன் உருவானது. மிகப் பண்டைய காலத்திலேயே ஏலம் நடைமுறையிலிருந்திருக்கிறது.கி.மு.500களில் ஏலம் நடத்தப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. பாபிலோனில், திருமணம் செய்துகொள்வதற்குப் பெண்களை ஏலம் விடுதல் நடைமுறையிலிருந்ததாக, ஹிரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளார். மகளை ஏலமல்லாத முறையில் விற்பது(திருமணம் செய்து தருவதுதான்!), அங்கு சட்டவிரோதமாக இருந்துள்ளது. ரோமப் பேரரசில் போர் வெற்றிக்குப்பின் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம்விட்டு, போர்ச் செலவை ஈடு செய்திருக்கிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துகளை ஏலம்விட்டு, கடனுக்கு ஈடு செய்வதும் அங்கு நடைமுறையிலிருந்திருக்கிறது. 17,18ஆம் ஆண்டுக்கால இங்கிலாந்தில் ‘மெழுகுவர்த்தி ஏலம்’ என்பது நடைமுறையிலிருந்திருக்கிறது. ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி எரிந்து முடிவது, ஏலத்திற்கான நேரமாகப் பின்பற்றப்பட்ட இதில், மெழுகுவர்த்தி முடிந்துவிட்டால் பொருள் கைநழுவிவிடும் என்பதால், அவசரமாக ஏலம் கேட்பார்களாம்.நேரத்தை வரையறுக்க, நடைப் பந்தையம் உள்ளிட்ட வேறு முறைகளும்கூட பின்பற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் கடற்படை, உபரிக் கப்பல்களை ஓர் அங்குல மெழுகுவர்த்தியில் ஏலம் விட்டதாக, நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பிஸ் 1660இல் பதிவுசெய்துள்ளார். கலைப் பொருட்களின் ஏலம் பெரும்பாலும் காஃபி நிலையங்கள், மது, உணவு கிடைக்குமிடமாகவும், தங்குமிடமாகவும் இருந்த சத்திரங்கள் ஆகியவற்றில் நடைபெற்றுள்ளது. 1674இல் ஸ்வீடனில் உருவான ஸ்டாக்ஹோம் ஏல நிறுவனம்தான், உலகின் முதல் ஏல நிறுவனமாகும். அதைத் தொடர்ந்து உருவாகிய பல ஏல நிறுவனங்களில் சில இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. க்றிஸ்ட்டீஸ் நிறுவனத்தின் இணையத்தளம், 1766 டிசம்பர் 5இல் முதல் ஏலத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டாலும், 1759இலேயே அந்நிறுவனத்தின் விற்பனை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விளம்பரங்களும் கிடைத்துள்ளன. ஹாமில்ட்டன் அரண்மனையில் சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களை 1882இலேயே 3.32 லட்சம் பவுண்டுகளுக்கு(தற்போது சுமார் ரூ.400 கோடி!) ஏலத்தில் விற்ற இந்நிறுவனம், 2015வரை ஏலத்தில் விற்ற பொருட்களின் மதிப்பு 480 கோடி பவுண்டுகளாம்(ரூ.53,300 கோடி)! இணையத்தின் வரவு, இத்தகைய ஏல விற்பனைகளில் அதிக மக்கள் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கி, வளர்ச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது!

பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று

உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று.

வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200.இவ்வளவு புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால் கூட இந்த எண்ணிக்கையைத் தொட இயலாதே! என்று எண்ணலாம்.ஆனால் இந்த அதிசயத்தை ஒரு எழுத்தாளர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.அவர்தான் இன்றுவரை ‘உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுகிறார்.

உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின் மூலம் சம்பாதித்தவர் இவர்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது.அவர்தான் அலெக்சாண்டர் டூமாஸ்.

நெப்போலியனின் குதிரைப்படை வீரனுக்கும், படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் வில்லர்க காட்டரட்சு என்ற கிராமத்தில் 1802 ஜூலை 24இல் பிறந்தார்.போர் வீரன் என்பதால் டூமாஸின் தந்தை உலகின் பல பாகங்களுக்கும் செல்கின்ற வாய்ப்பைப் பெற்றார். ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று வந்ததும் தன் மகன் டூமாசை அழைத்து, தாம் சென்று வந்த நாடுகள்; அந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள்; அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அங்கு தோன்றிய எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அந்த நூலின் வழியாக அந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியெல்லாம் விவரிப்பார்.குறிப்பாக பேனாவின் சக்தியையும், எழுத்தின் வலிமையையும் டூமாசுக்கு கதை போன்று தந்தை சொல்வார். இதுதான் டூமாஸின் வெற்றிகளுக்கு அடிப்படை ஆயிற்று.

டூமாஸின் நான்காவது வயதில் அவருடைய தந்தை இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியது. அன்புத் தந்தையை இழந்த சோகமும், வறுமையும் சேர்ந்து டூமாஸை வேதனையில் தள்ளியது.டூமாஸின் தாய் தன் மகனைப் படிக்க வைக்க ஆசைப்பட்டாள்.ஆனால் டூமாஸோ குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிந்தித்ததார். அம்மவிற்குத் தெரியாமல் காட்டுக்குள் சென்று பறவைகளை வேட்டையாடினார். பழங்களைச் சேகரித்தார். கிடைத்த பறவைகளையும், பழங்களையும் அம்மாவிடம் கொடுத்து, அவள் மகிழ்வாள் என்று எதிர்பார்த்தார்.

படிக்க வேண்டிய வயதில் வேட்டையாட தன் மகன் செல்கிறானே என்று தாய் வேதனைப்பட்டாள்.மகனை பாதிரியாராக்கினால், குடும்பத்திற்கு நல்ல வருமானம் வரும் என்று எண்ணிய டூமாஸின் தாய், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாள்; பாதிரியாரின் வாழ்க்கை பிடிக்காததால் மூன்று நாட்கள் வீட்டிற்கே வராமல் காட்டிலேயே வாழந்தார் டூமாஸ். கெஞ்சிக் கூத்தாடி மகனின் மனதை மாற்றி பள்ளிக்கு தாய் அனுப்பினாள்.

அங்கு பஃபான் என்பவர் நூலையும், பைபிளையும், இராபின்சன் கரூசோ, ஆயிரத்து ஓர் இரவு கதைகள் ஆகியவற்றை டூமாஸ் ஆவலோடு படித்தார்.ஆயிரத்தோர் இரவு கதைகளில் உள்ள வர்ணனைகள் டூமாஸை மிகவும் கவர்ந்தது.ஆரம்பத்தில் ‘மேய்ட்டர் மென்சன்’ என்ற வழக்குரைஞரிடம் உதவியாளராக டூமாஸ் சேர்ந்தார். அப்போது அடாலே டால்வின் என்ற பெண்ணை அலெக்சாண்டர் டூமாஸ் காதலித்தார்.ஆனால் இந்தக் காதல் வெற்றி பெறவில்லை. சிறிது காலத்தில் இந்த வேலையை விட்டு விலகினார்.

1823ஆம் ஆண்டு டூமாஸ் பாரிசுக்குச் சென்றார். எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை நகல் எடுக்கும் பணி கிடைத்தது. இதன் மூலம் போதுமான வருமானம் அவருக்குக் கிடைத்தது.அப்போது எதிர்வீட்டில் வாழ்ந்த கணவனை இழந்த காதரின்லியே என்பவளைக் காதலித்து டூமாஸ் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.டூமாஸ் எழுதிய நாடகம் ‘மூன்றாம் ஹென்றி’ இந்த நாடகம் அவருக்கு பெருமையைத் தேடித் தந்தது.‘அண்டோனி’, ‘மூன்று கத்தி வீரர்கள்’ போன்ற படைப்புகள் டூமாஸின் எழுத்தாற்றலுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

பிரான்ஸ் நாட்டு அதிபர்களின் கோழைத்தனங்களையும் சீமான் சீமாட்டிகளின் காதல் லீலைகளையும், அவர்களது ஆடம்பரப் போக்குகளையும் ஒட்டு மொத்தத்தில் மேல்தட்டு வர்க்கத்தின் போலித்தனமான வாழ்க்கைகளையும் டூமாஸின் படைப்புகள் வெளிப்படுத்தின.தொடர்ந்து டூமாஸ் எழுதிக் குவித்தார்.அவருடைய எழுத்துக்கள் மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றது.புகழும் பணமும், போட்டி போட்டுக் கொண்டு டூமாஸிடம் வந்து சேர்ந்தன. இதைச் சகித்துக் கொள்ள இயலாத பொறாமையாளர்கள், “டூமாஸ் பணம் கொடு த்து, பலரை தமது வீட்டில் வைத்து எழுதி, அதை தமது பெயரில் வெளியிடுகிறார்” என்று பிரச்சாரம் செய்தனர்.

பொய்ப் பிரச்சாரங்களை எல்லாம் நிர்மூலமாக்கிய டூமாஸை, அவருடைய பெண் மோகம் வீழ்த்தத் தொடங்கியது.

நாவல்களை நீல நிறத்தாள்களிலும்; கவிதைகளை மஞ்சள் நிறத்தாள்களிலும்; கட்டுரைகளை ரோஜா நிறத் தாள்களிலும் எழுதுவதை வழக்கமாகக் கொண்ட டூமாஸை, உயரம், குள்ளம், கருப்பு, சிவப்பு என பல வண்ணப் பெண்களின் அழகு ஆட்டிப் படைத்தது.அதனால் மனைவியும், மகனும் டூமாஸை விட்டுப் பிரிந்தனர். அந்தப் பிரிவு டூமாஸின் காதல் விளையாட்டிற்கு வாய்ப்பாயிற்று. எப்போதும் மங்கையர் மத்தியிலேயே டூமாஸ் காலம் தள்ளினார்.மங்கையர் அழகில் டூமாஸ் மனதைப் பறிகொடுக்க, அந்த மங்கையர் டூமாஸ் வீட்டில் இருக்கும் பொருட்கள் மீது கண் பதித்தனர். ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு பெண்ணும் எடுத்துச் சென்றனர்.

இறுதியில் அனைத்தையும் டூமாஸ் இழந்து நின்றார்.‘கலையின் சிகரம்’ என்று பெர்னாட்சாவினால் அழைக்கப்பட்ட டூமாஸ்;கரிபால்டியின் நண்பனாகத் திகழ்ந்த டூமோஸ்,எழுதிக்குவித்த டூமாஸ்;எழுத்தின் வழியாக பெரும் பணம் சம்பாதித்த டூமாஸ்;இறுதிக்காலத்தில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்தார். ஆடைகளை விற்று வாழ்ந்தார். 68ம் வயதில் 1870 இதே  டிசம்பர் 5இல்  அலெக்ஸாண்டர் டூமாஸ் காலமானார்.

இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று.😰

ஆ ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். எதையாவது போட்டு உடைப்பான், கத்துவான், அழுவான், அடம் பிடிப்பான். பியானோவின் முன்னால் அக்கா மரியா அமரும்வரை தான் எல்லா ரகளையும். அவர் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், முற்றிலும் புதிய மொசார்ட்டை நீங்கள் பார்க்க முடியும். எல்லா சேட்டைகளும் அடங்கிவிடும். மரியாவின் பின்னால் போய் ஒரு முயல் குட்டிபோல் சாதுவாக நிற்பான். எவ்வளவு நேரமானாலும் சரி. ஒரு சின்ன சத்தம்கூட வராது.

இந்த வாண்டா இவ்வளவு நேரம் வீட்டையே உடைத்து நொறுக்கிக்கொண்டிருந்தது என்று அப்பா லியோபோல்ட் மொசார்ட்டும் மற்றவர்களைப் போலவே திகைத்துதான் போனார். மூன்று வயதுக் குழந்தை எப்படி இசைக்குக் கட்டுப்பட்டு அழாமல் நிற்கிறது? என்ன புரிகிறது என்று அக்காவின் விரல்களையே பார்த்துக்கொண்டு நிற்கிறது? இசைதான் அவர் தொழில்.வயலின் வாசிப்பது எப்படி என்ற ஒரு புத்தகத்தை 1756-ம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்டிருந்தார். மொசார்ட் பிறந்ததும் அதே ஆண்டுதான். அப்படியானால் இசைக்கும் என் குழந்தைக்கும் அழுத்தமான பிணைப்பு இருக்கிறதா?

ஐந்து வயதாகும்போது ஒரு நாள் நாற்காலியை இழுத்துவந்து மொசார்ட்டைத் தூக்கி உட்கார வைத்தார் அப்பா. ஒவ்வொரு விரலாக எடுத்து விசையின் மீது வைத்து அழுத்தினார். என்னையும் அக்காவையும்போல் நீயும் இசை கற்றுக்கொள்ளப் போகிறாயா மொசார்ட்? இது உனக்குப் பிடித்திருக்கிறதா? குழந்தையின் விரல்களின் மேல் தன் விரல்களை வைத்து ஒரு சிறிய பாடலை இசைத்துக் காட்டினார்.

“இந்தா, இப்போது நீ வாசி பார்க்கலாம்.”  உண்மையில் ஓர் இசை மேதையை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து அவர் இதைத் தொடங்கவில்லை. கொஞ்ச நேரம் மொசார்ட் குறும்புகள் செய்யாமல் இருந்தால் அந்த வீடு மட்டுமல்ல, அந்தத் தெருவே அமைதியாக இருக்கும் அல்லவா? அப்படிதான் நடந்தது. ஆனால் அப்பா ஆச்சரியம் அடையும் அளவுக்கு மொசார்ட்டின் சின்னஞ்சிறிய விரல்கள் விசைகளோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டன.சின்னச் சின்ன இசைக் கோவைகளாகத் தேர்ந்தெடுத்து அப்பா அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். எதையும் இரண்டு, மூன்று முறை மட்டுமே இசைத்துக் காட்ட வேண்டியிருந்தது. அப்பா நகர்ந்ததும், அப்படியே அதை வாசித்துக் காட்டுவான் மொசார்ட். அச்சு அசலாக அப்படியே.

அப்படியானால், என் விரல்களின் அசைவுகளைக் கூர்மையாகக் கவனித்து மனப்பாடம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டானா? எனில், இசையின் மொழி மொசார்ட்டுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டதா? ஒரு குழந்தை உண்மையில் இது சாத்தியம்தானா? மொசார்ட் வாசிப்பதைப் பார்க்கப் பார்க்க அப்பாவின் ஆச்சரியம் அதிகரித்துக்கொண்டே போனது. சற்றே பெரிய பாடல்களை, இசைக் கோவைகளை வாசித்துக் காட்டினார். மொசார்ட்டின் கூர்மையான காதுகள் அனைத்தையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டன. உள்வாங்கிக்கொண்ட அனைத்தையும் அவனுடைய மெலிந்த விரல்கள் அற்புதமாக வெளிப்படுத்தின. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் வாசிப்பது ஒரு குழந்தை என்றே கண்டுபிடிக்க முடியாது.

அடுத்தடுத்த நாட்களில் அவர் திகைப்பு நூறு மடங்கு அதிகரித்தது. இப்போது மொசார்ட் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறான்? இதை நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே? ஒருவேளை மரியா கற்றுக் கொடுத்திருப்பாளா? இல்லையே, அவளுக்கும்கூட இது தெரியாதே. கண்களை மூடி வாசித்துக்கொண்டிருந்த மொசார்ட்டை நெருங்கினார்.

”மொசார்ட், இதை யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது?” மொசார்ட்

அப்பாவை அண்ணாந்து பார்த்துச் சிரித்தான். “எப்படி வாசிக்க வேண்டும் என்று நீங்கள் கற்றுக் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா? அதான், நானே புதிதாக வாசித்துப் பார்த்தேன். நன்றாக இருக்கிறதா அப்பா?”அள்ளி அணைத்துக்கொண்டார் அப்பா. பத்து வயது மரியாவையும் ஆறு வயது மொசார்ட்டையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள பெரிய மனிதர்களின் வீடுகளுக்குச் சென்றார். இசை நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினார். ‘அடடா, அபாரமான குழந்தைகள், பிரமாதமான இசை. நீ கொடுத்து வைத்தவன் லியோபோல்ட். அது சரி, அந்த வாண்டின் பெயர் என்ன? எத்தனை துள்ளலோடு இசைக்கிறான் பாரேன்!’குவிந்த பாராட்டுகளால் உற்சாகமடைந்த அப்பா பாரிஸ், லண்டன், சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளுக்குத் தன் குழந்தைகளை அழைத்துச் சென்றார். அரசர்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று அனைவரும் மொசார்ட்டின் திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். உன் வயது ஆறுதானா மொசார்ட் என்று திரும்பத் திரும்பக் கேட்டுத் திகைத்துப் போனார்கள்.

இது ஏதோ வித்தை என்று நினைத்த சிலர், மொசார்ட்டை மட்டும் வேறு ஓர் அறைக்கு அழைத்துச் சென்று வாசிக்கச் சொன்னார்கள். இன்னும் சில இசை வல்லுநர்கள் மொசார்ட்டுக்குத் தேர்வு வைத்துப் பார்த்தார்கள். பயமும் திகைப்பும் அதிர்ச்சியும் பொங்கத் தன்னைப் பார்த்தவர்களைக் கண்டு சிரித்தான் மொசார்ட். ”வேண்டுமானால் இதையே வயலினில் வாசித்துக் காட்டட்டுமா? அப்போது நம்புவீர்களா?”

ஒருமுறை ரோமில் உள்ள வாடிகன் நகருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே மயக்க வைக்கும் இசைக் கோவையைக் கேட்டான் மொசார்ட். அதை உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்று மொசார்ட்டின் மனம் துடித்தது. இது போப்பின் பிரத்தியேகமான இசை. உன்னைப் போன்ற பொடியனுக்கு எல்லாம் கற்றுத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.ஓ, சரி என்று வீட்டுக்கு வந்த மொசார்ட், ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து மளமளவென்று தான் காலையில் கேட்ட இசைக் கோவையின் நொட்டேஷனை எழுதி முடித்தான். மறுநாள் போப் முன்னிலையில் மொசார்ட் அதை வாசித்துக் காட்டியபோது அவர் அதிர்ந்துவிட்டார்.

“இது ரகசியமானது அல்லவா? உனக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?” மொசார்ட் குறும்புடன் சிரித்தான். “நேற்று காலை இந்தப் பக்கம் நடந்து செல்லும்போது கேட்டேன், வாசிப்பதற்கு அப்படி ஒன்றும் கடினமாக இல்லையே. இதை ஏன் ரகசியமாக வைத்திருக்கிறீர்கள்?”

போப்பிடம் இருந்து தங்கப் பதக்கத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியதுதான் தாமதம், பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்கள். உங்கள் வாண்டு நிஜமாகவே ஒரு மேதை என்று வியந்தவர்களைப் பெருமிதத்துடன் பார்த்தார் அப்பா. அதற்குப் பிறகு அவர்கள் சொன்னதைக் கேட்டு அவருக்கு மயக்கமே வந்துவிட்டது. ‘இப்போதெல்லாம் அவன் குறும்பு எதுவும் செய்வதில்லை போலிருக்கிறதே. ஏதாவது புதிய விளையாட்டு பொம்மை வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா?’

இப்பேர்பட்டஅவர் 35 வயதில் மரணமடைந்தார். அன்றைக்கு ஆஸ்திரியாவில் இருந்த சடங்குகளின் படி அவரை பலபேர் அடக்கம் செய்யப்பட்ட சவக்குழியில் அடக்கம் செய்தார்கள் ; மக்கள் பெரும்பாலும் அவரை வழியனுப்ப வரவில்லை -அதுவும் நம்ம சென்னை பிரஸ் கிளப் மெம்பர்களிடம் உள்ளது போன்ற ஆஸ்திரியாவின் பழக்கமே.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...