ஒருநாள் தொடரில் நியூஸிலாந்திடம் இந்திய அணி மோசமாகத் தோற்றது ஏன்?

 ஒருநாள் தொடரில் நியூஸிலாந்திடம் இந்திய அணி மோசமாகத் தோற்றது ஏன்?

   இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது நியூஸிலாந்து. டி20 தொடரை இந்திய அணி 5-0 என வென்றதால் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக 3 ஆட்டங்களிலும் தோற்றது. 

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்று இவற்றைச் சொல்லலாம். 

கோலி – 75 ரன்கள் மட்டும்!

51, 15, 9.

  கோலி ஒவ்வொருமுறை களமிறங்கும்போதும் சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவும். ஆனால் இந்தமுறை அவர் 3 ஆட்டங்களிலும் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கோலியும் அடிக்காமல், ரோஹித் சர்மாவும் விளையாடாமல் இந்திய அணி மிகவும் தடுமாறிவிட்டது. 

விராட் கோலி – கேப்டனாக ஒருநாள் தொடரில் குறைந்த ரன்கள்

75 v நியூஸிலாந்து (நியூஸிலாந்தில்), 2019/20*
89 v மே.இ. தீவுகள் (இந்தியாவில்), 2019/20
148 v நியூஸிலாந்து (நியூஸிலாந்தில்), 2018/19 

சொதப்பிய பும்ரா!

30-1-167-0

பும்ராவுக்கு ஒருநாள் தொடர் இப்படி அமையும் என யார் தான் எண்னியிருக்க முடியும்?

  மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் 30 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதாவது பும்ராவுக்கு ஒரு விக்கெட்டும் தராதது தான் நியூஸிலாந்து அணி வெற்றியின் ரகசியம் என்றே சொல்லலாம். இத்தனைக்கும் டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசினார் பும்ரா. அதன்பிறகு அடுத்த மூன்று ஆட்டங்களிலும் பழைய பும்ராவைக் காண முடியவில்லை. அதே கதை ஒருநாள் தொடரிலும் தொடரும் என யாருமே யூகித்திருக்க முடியாது. 

மோசமான ஃபீல்டிங்

   நாங்கள் ஃபீல்டிங் செய்த விதம், சர்வதேசத் தரத்தில் இல்லை என்று விராட் கோலியே நொந்துகொள்ளும் அளவுக்கு இந்திய அணி வீரர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்தார்கள். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி மோசமான ஃபீல்டிங் செய்தது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல தொடர்களில் இந்திய அணி தோற்கவேண்டியிருக்கும். 

காப்பாற்றாத தொடக்க வீரர்கள்

  ரோஹித் சர்மா, ஷிகர் தவன் தொடரில் விளையாடவில்லை. ராகுல் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார். இந்த நிலையில் இந்திய அணிக்குப் புதிதாக இரு தொடக்க வீரர்கள் களமிறங்கினார்கள்.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால்.

  மூன்று ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கொடுத்தும் இருவரும் ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை. பிரித்வி ஷா அதிகபட்சமாக 40 ரன்களும் மயங்க் அகர்வால் 32 ரன்களும் எடுத்தார்கள். மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து இருவரும் முறையே 84, 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். இது தவிர விராட் கோலியும் எடுபடாததால் ஒருநாள் தொடர் முழுக்க ஷ்ரேயஸ் ஐயரும் ராகுலும் தான் இந்திய அணியைக் காப்பாற்றவேண்டியிருந்தது. அதனால் தான் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இருவரும் முதலிடம் பிடித்தார்கள். எனினும் இந்திய அணி இருவருடைய பங்களிப்பையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

ஏமாற்றிய பந்துவீச்சாளர்கள்

   இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் சிறப்பாகப் பந்துவீசியவர் சஹால் மட்டுமே. அதனால் தான் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடினாலும் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் சஹால் 6 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பும்ராவைத் தவிர இந்திய அணி மிகவும் நம்பி வாய்ப்புகளை அளித்த ஷர்துல் தாக்குரும் சைனியும் ஏமாற்றினார்கள். ஷர்துலின் எகானமி – 8.05, சைனி – 6.44. 2 ஆட்டங்களில் விளையாடிய சைனி, பும்ரா போல ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. ஜடேஜா மீது பெரிய குறையில்லை. 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் எடுத்தார். எகானமி – 4.80.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...