கேரளாவில் அதிர்ச்சியடைந்த மக்கள்….
வீட்டின் தண்ணீர்க் குழாயில் கொட்டிய மதுபானம்:
கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளில் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் மதுபானம் கொட்டியதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18 வீடுகளில் தண்ணீர் குழாயில் மதுபானம் நேரடியாக பக்கெட்டுகளில் வந்து தஞ்சம் அடைந்தன.
இதற்கு காரணம் தெரியாமல் விழித்த பொதுமக்களுக்கு, சமீபத்தில் சுங்கத் துறை அலுவலகம் 6 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை பூமியில் கொட்டி அழித்தது நினைவுக்கு வந்தது.
அதன்பிறகே, அவர்கள் ஆர்டர் கொடுக்காமல், குடிநீர் குழாயில் மதுபானம் வந்ததற்குக் காரணம் தெரிந்தது. அதாவது சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் இயங்கி வந்த ஒரு மதுபானக் கடையில் அனுமதியில்லாமல் 6 ஆயிரம் லிட்டர் மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை சுங்கத் துறையினர் கைப்பற்றினர். பிறகு அது அழிக்கப்பட்டது.
அதாவது, பார் இருந்த இடத்திலேயே ஒரு பள்ளம் தோண்டி, அனைத்து மதுபானங்களையும் அதில் ஊற்றியுள்ளனர் அதிகாரிகள். இந்த பள்ளத்துக்கும், தற்போது மதுபானம் வரும் வீடுகளும் பக்கம் பக்கம் என்பதால், நிலத்தில் ஊற்றப்பட்ட மதுபானம், நிலத்தில் ஊறி, அங்கிருக்கும் குழாய்கள் மூலம் தண்ணீரோடு கலந்து வந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை நாடியுள்ளனர்.