நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை:
அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ கருத்து…..!!
நடிகர் விஜய் வீட்டில் நடைபெறும் வருமானவரி சோதனை குறித்து அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
எனினும், சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் குறித்த முழுத் தகவல்களையும், வரி ஏய்ப்பு குறித்த தகவல்களையும் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் சென்னை ஆவடியில் அம்மா திருமண மண்டப பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் வீட்டில் நடைபெறும் ஐ.டி.ரெய்டில் அரசியலுடன் முடிச்சுப்போடத் தேவையில்லை. மாணவர்களுக்கு தந்தையாக, சகோதரனாக இருந்து ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார். சிஏஏவுக்கு எதிராக திமுக நடத்திவரும் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும். கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் விட்டு வைத்துள்ளது?. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜய் வீட்டில் நடைபெறும் வருமான வரி சோதனை குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான். தவறு செய்வோர் மீதான நடவடிக்கையில் அதிமுக அரசு தலையிடாது. எங்கள் மீது குறை இருந்தாலும் உடனே சொல்லுங்கள், நாங்கள் திருத்திக் கொள்ளத் தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.