சைக்கோ: சினிமா விமர்சனம்

 சைக்கோ: சினிமா விமர்சனம்
புகழ்பெற்ற மர்மக் கதை இயக்குநர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ திரைப்படம்,

திகில் திரைப்படங்களில் ஒரு மைல்கல்லாக குறிப்பிடப்படும் படம். அந்தப் படத்தின் லேசான சாயலோடு உருவாகியிருக்கிறது மிஷ்கினின் இந்த ‘சைக்கோ’. கோயம்புத்தூரில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்திக் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களது தலையில்லாத உடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அந்தக் கொலைகாரனை (ராஜ்) பிடிக்க காவல்துறை துப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க கண் தெரியாத இசைக் கலைஞனான கௌதம் (உதயநிதி), தாகினி (அதிதி ராவ்) என்ற ரேடியோ ஆர்ஜேவை ஒரு தலையாகக் காதலிக்கிறான்.

திடீரென தாகினியும் அந்த கொலைகாரனால் கடத்தப்படுகிறாள். காவல்துறை இந்த வழக்கிலும் திணற ஆரம்பிக்க, தானே களத்தில் இறங்கி கொலையாளியைத் தேட ஆரம்பிக்கிறான் கௌதம்.

அவனுக்கு துணையாக, கழுத்திற்குக் கீழ் செயல்படாத முன்னாள் காவல்துறை அதிகாரியான கமலா (நித்யா மேனன்) வருகிறாள். ஒரு வாரத்திற்குள், கொலையாளியைக் கண்டுபிடிக்காவிட்டால், அவன் தாகினியைக் கொன்றுவிடுவான் என்ற நிலையில், கௌதம் என்ன செய்கிறான் என்பது மீதிக் கதை.
படத்தின் துவக்கம் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. தொடர் கொலைகள் நடப்பது, கதாநாயகியே கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வது, கண் தெரியாத கதாநாயகன் தனக்குக் கூடுதலாக இருக்கும் திறன்களை வைத்து துப்பறிய ஆரம்பிப்பது என விறுவிறுப்பாகவே நகர்கிறது படம். அதிலும் கண் தெரியாததால், வாசனைகளை வைத்தும் கொலை செய்யப்பட்டவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தை வைத்தும் கொலைகாரனை கதாநாயகன் மெல்ல மெல்ல நெருங்குவது போன்றவையெல்லாம் சுவாரஸ்யம். 

ஆனால், படத்தின் இரண்டாம் பாதி சற்று ஏமாற்றமளிக்கிறது. கொலைகாரனைத் தேடுவதில் பெரிய முன்னேற்றமில்லாமல், படம் தொய்வடைய ஆரம்பிக்கிறது. கொலைகாரன் ஒரு சைக்கோவானதற்காக சொல்லப்படும் காரணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. கொலைகாரன் தன் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்பதைப் போல நடத்தும் ஒரு நாடகத்தைப் போன்ற காட்சி, தனியாகப் பார்த்தால் சிறப்பான ஒன்று. ஆனால், இந்தப் படத்தில் அந்தக் காட்சி படத்தில் உருவாகியிருந்த விறுவிறுப்பைக் குலைக்கிறது.

திரைக்கதையில் தென்படும் பல லாஜிக் மீறல்களும் படத்தின் பலவீனமாக அமைகின்றன. நகர்ப்புற பகுதியில் இத்தனை கடத்தல்கள் நடந்தும், சிசிடிவி காட்சிகள் குறித்து படத்தில் பேச்சே இல்லை. குறிப்பாக கார் பார்க்கிங்கில் நடக்கும் கொலையில்கூட அந்த திசையில் காவல்துறை செல்வதில்லை.மேலும், கண் தெரியாத தனி மனிதரான கதாநாயகன், கொலைகாரனை நெருங்கிக்கொண்டே இருக்க, ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட பிறகும் போலீஸிற்கு எந்தத் துப்பும் கிடைக்காமலேயே இருக்கிறது. இத்தனைக்கும் கதாநாயகனை, போலீஸ் பின்தொடர்வதாகக் காட்டுகிறார்கள். அப்படியானால், கதாநாயகன் கொலைகாரனை நெருங்கும்போது காவல்துறையும் நெருக்கியிருக்க வேண்டும். அப்படி ஏதும் நடப்பதில்லை. ஒரு கட்டத்தில், கொலையை விசாரித்துவரும் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட பிறகு படத்தில் போலீஸே இல்லாமல் போய்விடுகிறார்கள்.

படத்தின் இறுதிக் காட்சியில், கழுத்திற்குக் கீழ் செயல்படாத கமலா வழிசொல்ல, கண்தெரியாத கதாநாயகன் காரை வேகமாக ஒட்டிச் சென்று, ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் சென்று, கதாநாயகனை வீழ்த்தி, நாயகியை மீட்பது என்பதெல்லாம் ரொம்பவே சோதிக்கும் காட்சிகள். படத்தின் பல பாத்திரங்களுக்கு கமலா தாஸ், சில்வியா பிளாத் என எழுத்தாளர்களின் பெயரை வைத்திருக்கிறார் மிஷ்கின்.ஆனால், படத்தில் உள்ள பல அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ஒளிப்பதிவும் பின்னணி இசையும். தன்வீரின் ஒளிப்பதிவிற்காகவே பல மெதுவான ஷாட்களை ரசிக்கலாம். இளையராஜாவின் பின்னணி இசை, ஒரு கிளாசிக் மர்மப் படத்திற்கு உரியது.

படம் வெளியாவதற்கு முன்பாகவே பிரபலமாகிவிட்ட “உன்னை நினைச்சு.. நினைச்சு” பாடல், படத்தில் சரியான இடத்திலேயே பொருந்தியிருக்கிறது.கதாநாயகனாக நடித்திருக்கும் உதயநிதிக்கு பெரிய அளவில் க்ளோஸ் – அப் ஷாட்கள் கிடையாது. ஆனால், அவருக்கு இது குறிப்பிடத்தக்க படம்தான். அதிதி ராவ் ஹைதரியும் நித்யா மேனனும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...