‘சர்வதேச ஆண்கள் தினம்’ இன்று
ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தைகளாக, சகோதரர்களாக, கணவர்களாக, சக ஊழியர்களாக சமுதாயத்தில் சாதனை படைத்து வரும் ஆண்களின் பங்களிப்பு மற்றும் சாதனையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதையும், ஆண்களுக்கான நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படும் ஆதரவு மற்றும் கொண்டாட்டங்களை போலவே ஆண்களுக்கும் தனி ஒருநாள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு ஆண்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச ஆண்கள் தினம் 1999-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் கடந்த 1999-ல் தனது தந்தையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான டாக்டர் ஜெரோம் டீலக்ஸிங் என்பவரால் (Dr. Jerome Teelucksingh) நவம்பர் 19-ல் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் மற்றும் ஆண்கள் தங்களை பாதிக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்த தனது தந்தையின் பிறந்த நாளான நவம்பர் 19-ஐ ஆண்கள் தினமாக கொண்டாட மக்களை ஊக்குவித்தார்.
சர்வதேச ஆண்கள் தினமானது குறிப்பாக ஆண்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம், அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சார்ந்த போராட்டங்கள் மற்றும் அவர்கள் பாதிக்கப்படும் சமூக நிலைமைகள் பற்றி பேசுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களின் கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்க மற்றும் கொண்டாடவும் இந்நாளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
WHO தரவுகளின்படி, 45 வயதிற்குட்பட்ட ஆண்களின் மரணத்திற்கு தற்கொலை முக்கிய காரணமாக இருக்கிறது. யுனைடெட் கிங்டம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா உட்பட உலகின் பல நாடுகளில் அதிக ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது வெளிப்படையாக உள்ளது. ஆண்கள் தங்கள் கஷ்டத்தை வெளி காட்டமாட்டார்கள் குறிப்பாக என்ன சோதனை வந்தாலும் அழ மாட்டார்கள் போன்ற அடையாளங்கள் பெரும்பாலும் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நாளை சர்வதேச மகளிர் தினத்துடன் போட்டியிடுவதை நோக்கமாக கொண்ட நாளாக பலர் பார்க்கிறார்கள். ஆனால் மதிப்புகள், கொள்கைகள் குணாதிசயங்கள் கொண்ட வாழ்க்கையை வாழ ஆண்களை அனுமதிக்க மற்றும் மனம் திறந்து பேசவே இந்த சர்வதேச ஆண்கள் தினம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இந்த ஆண்டு சர்வதேச ஆண்கள் தினத்திற்கான கருப்பொருள் ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சிறந்த உறவுகள்’ (Better relations between men and women) என்பதாகும். இந்த தீம் பாலின உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.