இந்தியாவிலேயே முதல் முறையாக.. ஸ்டாலின் துவங்கி வைத்த சூப்பர் திட்டம்..!!
இந்தியாவிலேயே முதல் முறையாக.. ஸ்டாலின் துவங்கி வைத்த சூப்பர் திட்டம்..!!
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் புதிய முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காகப் பல பல முயற்சிகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் எப்படி அனைத்து மக்களுக்கும், அனைத்து விதமான சேவைகளும், வாய்ப்புகளும் கிடைக்கிறதோ, அதேபோல் தொழிற்துறையில் அனைவருக்கும், அனைத்து விதிமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.
இதன் ஒரு படியாகத் தனியார் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கும் முயற்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு டைடல் பார்க் வாயிலாக டெக் நிறுவனங்களுக்கு அலுவலக இடங்களையும், சிப்காட் வாயிலாகத் தொழிற்சாலைகளுக்கான இடங்களையும் பல வருடமாக அளித்து வரும் வேளையில், முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்த புதிய இளைஞர் பயிற்சி மையமான முதல்வர் படைப்பகம், வடக்கு சென்னை பகுதியில் உள்ள அகரத்தில் ஜெகனாதன் தெருவில் அமைந்துள்ளது. இந்த புது முயற்சியில் துவங்கப்பட்ட முதல் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் வசதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறக்கப்பட்டது. இந்த முதல்வர் படைப்பகம் மையம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகம் சுமார் 2.85 கோடி ரூபாய் முதலீட்டில் 3 தளத்தில் கட்டப்பட்டு உள்ளது.
இப்புதிய திட்டத்திற்கான நிதியை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக்கு அமைப்பு, கொளத்தூர் எம்எல்ஏ ஸ்டாலின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவை இணைந்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 2400 சதுரடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த முதல்வர் படைப்பகம் தரைதளம் மற்றும் 2 மேல் தளம் உடன் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் படைப்பகத்தின் தரைதளத்தில் 38 பேர் அமரும் வகையில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் 4-6 பேர் பயன்படுத்தும் 3 கான்பிரென்ஸ் ரூம்-கள் உள்ளது. முதல் தளத்தில் சுமார் போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள வசதியாக 2000 புத்தகங்கள், 3 கம்ப்யூட்டர் டெஸ்க் வசதிகள் உடன் 51 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேல் தளத்தில் டீ மற்றும் ஸ்னாக்ஸ் விற்கப்படும் 30 பேர் அமரும் வகையில் கேன்டீன் மற்றும் டைனிங் வசதிகள் உடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோ வொர்க்கிங் ஸ்பேஸ்-ஐ புக் செய்ய ஆன்லைன் வசதியும் உள்ளது, மேலும் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் இருக்கைகளை நாள், வார, மாத அடிப்படையில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையில் பயன்படுத்த முடியும்.
இந்த கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவை பெரிய நிறுவனங்களுக்கு அளிக்காமல் சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கும் முக்கிய கண்டிஷனும் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறிய நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இந்த மையத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொழில்நுட்ப பயிற்சி, மென்பொருள் மேம்பாடு, மொழி பயிற்சி, தலைமைத்துவ பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் இடம்பெறும். இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளைப் பெற தயாராகலாம்
மேலும், இந்த மையத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறி, பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும். இந்த மையம் வடசென்னை பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், சென்னை முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.