இந்தியாவுக்காக தோனி மீண்டும் விளையாட மாட்டார்: ஹர்பஜன் சிங் தகவல்…
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி பிசிசிஐ 2019-20 ஆண்டு ஏ பிளஸ் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய வீரர் ஹர்பஜன் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
2019 உலகக் கோப்பை வரை தான் விளையாட தோனி முடிவெடுத்திருந்ததால் இனிமேல் இந்திய அணிக்காக அவர் விளையாடுவார் என நினைக்கவில்லை. அவர் ஐபிஎல் போட்டிக்காகத் தயாராகிக் கொண்டு வருகிறார் என நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி அவருக்குச் சிறப்பாக அமையும் என நம்பிக்கையுடன் சொல்வேன். அவருக்கு அதுபோன்று சிறப்பான ஐபிஎல் அமைந்தாலும் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவார் என நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.