மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆா் குறித்து இன்று ஆலோசனை
மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.
தில்லியில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தலைமை வகிக்கவுள்ளாா். இதில், மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநா்கள் பங்கேற்கவுள்ளனா்.
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பான நடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினாா்.
மேற்கு வங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டாா்கள் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஏற்கெனவே அறிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.