புதுக்கவிதைகள்
பல்லி கத்தும்போதெல்லாம்
பயத்துடன் என்னை
இறுக்க(மாக) அணைக்கிறாள்
மனைவி!
எனக்கென்னவோ
அப்பொழுதெல்லாம்
சகுனம்
மிக நன்றாகவே இருக்கிறது
எனக்கு!
………………………………………
பிறவிப் பயனை
அடைந்ததற்காக
நன்றி சொல்லிக்
கீழே உதிர்கிறது
உன் கூந்தலில்
அமர்ந்திருந்த ரோஜா!
…………………………………………….
சிவந்த
உன் மருதாணிக் கரங்களை
என்னிடம் காட்டுகிறாய்!
பச்சை நிறத்தை
மனம் முழுக்கப்
பூசிக் கொள்கிறது
என் காதல்!
……………………………
நீ
வந்து செல்லும்போதெல்லாம்
பார்வையிலிருந்து
நீ
மறையும் வரை
இமைக்காதிருக்கும்
வரம் கேட்கிறது
என் கண்கள்!
………………………………………
நீ
தலையை ஆட்டிப் பேசும் போதெல்லாம்
என்ன அழகாய் ஆடுகிறது
உன் ஜிமிக்கி கம்மல்!
அதனிடமிருந்து தான்
என் மனமும்
களிப்பில்
ஆடக் கற்றுக் கொண்டிருக்குமோ!
முத்து ஆனந்த். வேலூர்