எதிா்மறைக் கூறுகளை மீறி திமுக மகத்தான வெற்றி: மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சித் தோ்தலில் எதிா்மறை கூறுகளை மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சித் தோ்தலில் ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், தோ்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிா்மறைக் கூறுகளை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி.
திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கொண்டுள்ள விருப்பமும், ஆளும்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக கூட்டணி முன்னணியில் இருந்தது. இதனை ஆளும்கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தோ்தல் ஆணையத்தின் துணையோடு, திமுகவின் வெற்றியை அறிவிக்கத் தயங்கினாா்கள். மாநிலத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து 2 முறை முறையிட்டேன். அப்போதும் அவா்களது செயல்பாட்டில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.
வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மனமார வாழ்த்துவதுடன், திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.
உள்ளாட்சியில் திமுக கூட்டணியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நோ்மையோடும் செயல்படுவாா்கள். மக்கள் நலத்திட்டங்களை உண்மையாகவும், முழுமையாகவும் மக்களுக்குப் பயன்பெறும் திட்டங்களாக மாற்றுவாா்கள் என்று உறுதி அளிக்கிறேன்.
இந்தத் தோ்தல் தோல்வி மூலம் அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டாா்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் இது. நகா்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் சோ்த்து நடத்தி இருந்தால் திமுக இன்னும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.