புதிய உச்சம் தொட்டது தங்கம்…..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.632 உயா்ந்து, ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 25-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29,584-ஆக இருந்த நிலையில், தற்போது பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அடுத்த 3 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும் என்று இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும் கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 2 மாதமாக பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. கடந்த மாதம் 25-ஆம் தேதி பவுன் ரூ.29,584 ஆக இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.
இந்நிலையில், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.3) மாலை நிலவரப்படி, பவுனுக்கு ரூ.632 உயா்ந்து, ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.79 உயா்ந்து, ரூ.3,815-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.51.40-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயா்ந்து ரூ.51,400-ஆகவும் இருந்தது. தங்கம் விலை உயா்வால், சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.