மிகச்சரியான கேப்டன் என யாரும் இல்லை: கோலிக்கு ஆதரவு தரும் ரவி சாஸ்திரி
விராட் கோலியின் தலைமைப் பண்பு குறித்த விமரிசனங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
மிகச்சரியான கேப்டன் என யாரையும் நான் பார்த்ததில்லை. வெவ்வேறு பலங்கள், பலவீனங்கள் கொண்ட கேப்டன்கள் தான் இருப்பார்கள். ஒரு கேப்டன் ஒரு திட்டத்தில் வலுவாக இருப்பார். இன்னொன்றில் பலவீனமாக இருப்பார். ஆனால் அந்த விஷயத்தில் இன்னொரு கேப்டன் வலுவாக இருப்பார். ஆட்டத்தின் முடிவுகளைத்தான் நீங்கள் காணவேண்டும்.
விராட் கோலி, ஒரு கேப்டனாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார். ஆடுகளத்தில் அவர் கொண்டு வரும் ஆக்ரோஷம், ஆர்வத்தை எவருடனும் ஒப்பிட முடியாது. வேறு எந்த கேப்டனும் அவரளவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்துவதில்லை. வரும் காலங்களில் ஒரு கேப்டனாக நிச்சயம் முன்னேற்றம் அடைவார். யார் கேப்டனாக இருந்தாலும் நாளுக்கு நாள் கற்றுக்கொள்ளும் விதமாகத்தான் அவர்களுடைய பணி இருக்கும். முதல் நாளிலிருந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்கிற நிலையில் எந்த கேப்டனும் இருந்ததில்லை. இதுவரை கோலி தலைமை வகித்த விதம் அபாரம் என்று கூறியுள்ளார்