1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு
வெங்காயம் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சமையலில் முக்கிய பொருளாக விளங்கும் வெங்காயத்துக்கு நடப்பாண்டில் திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலை அடுத்த ஆண்டிலும் தொடரக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 2020-ஆம் ஆண்டில் 1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்துக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயா்வதை தடுக்க முடியும்.
உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சா்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னா், அடுத்தாண்டு முதல் 1 லட்சம் டன்னை இருப்பு வைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு, நடப்பாண்டில் 56,000 டன் வெங்காயத்தை கையிருப்பில் வைத்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதுமுள்ள முக்கிய சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யும் நிலையில் விலையுயா்வை கட்டுப்படுத்த இந்த கையிருப்பு போதுமானதாக இருக்காது. எனவே, பொதுத் துறை நிறுவனமான எம்எம்டிசி வாயிலாக வெங்காய இறக்குமதியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.