கலைவாணர் எனும் மாகலைஞன் – 9 – சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மாகலைஞன் – 9 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன்
9 ) பேசும்படம் நாடகத்துக்குத் தந்த தடுமாற்றம்…
————————————————————————
இன்ஸ்பெக்டர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசினார். அவர் வெட்டச் சொன்ன காட்சிகள் இவைதான். ‘சொற்பொழிவை சி.ஐ.டி. குறிப்பெடுப்பது போன்ற முதல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்றார் அவர். தீவிரவாதியோடு மிதவாதி பேசுவதாக வரும் காட்சியும் இடம் பெறக் கூடாது. அதுமட்டுமல்ல… நாடகத்தின் இறுதிக் காட்சியில் தொண்டர்படைத் தளபதி கைராட்டையைச் சுமந்து வரக்கூடாது.’ இன்ஸ்பெக்டர் சொன்ன இந்தத் திருத்தங்களைக் கேட்டு திகைத்து நின்றார் கிருஷ்ணன். இந்த மூன்றுமே அவர் தோன்றும் காட்சிகள்தாம். வேறு வழியில்லை. நாடகத்தைப் பாதிக்காத வகையில் இந்தக் காட்சிகளை நீக்கிவிடலாம் என்று முடிவு செய்தார்கள் கிருஷ்ணனும் முத்துச்சாமியும். அதனையே காவல் நிலையத்திலும் ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள் இருவரும்.
மறுநாள் நாடகம் நடந்தது. அதில் அவர்கள் காவல்நிலையத்தில் ஒப்புக்கொண்டபடி குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு நாடகத்தை நடத்தினார்கள். ஒருவாரம் சென்றிருக்கும். போலீசார் யாரும் வரவில்லை என்ற தைரியத்தில் அன்று இன்ஸ்பெக்டர் ஆட்சேபனை தெரிவித்திருந்த காட்சிகளை நீக்காமலேயே நாடகத்தை நடத்திவிட்டார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாடகத்தில் நீக்கச் சொன்ன காட்சிகளின் முக்கியத்துவம் அப்படிப்பட்டதாக இருந்தது. மனமின்றித்தான் அக் காட்சிகளை வெட்டிவிடுவதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள். அதனாலேயே அன்று அரங்கத்துக்குள் காவல்துறை ஆட்கள் யாருமில்லையே என்று மகிழ்ந்துபோய் நீக்கப்பட்ட காட்சிகளைச் சேர்த்தே நாடகத்தை நடத்திவிட்டார்கள். அத்தனை ஆர்வமிகுதி. ஆனால் என்ன? அந்த அசம்பாவிதம் நடந்தேவிட்டது.
சீருடை அணியாத போலீசார் ரகசியமாக பார்வையாளர்கள் மத்தியில் கலந்திருந்ததை சகோதரர்கள் அறியவில்லை. கிருஷ்ணனுக்கும் இது விசயத்தில் கவனமில்லாமல் போயிற்று. போலீசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்கான தண்டனை கிடைத்தேவிட்டது. ஆமாம்… நெல்லைச் சீமை முழுமையிலும் தேசபக்தி நாடகம் தடைசெய்யப்பட்டது. நாடகம் நடந்த நாளுக்கு மறுநாள் காவல் அதிகாரியொருவர் டி.கே.எஸ். சகோதரர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். திருநெல்வேலி மாவட்டம் முழுதும் அந்த நாடகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்கிற உத்தரவு அடங்கிய தாளைக் கொடுத்துவிட்டுப் போனார். நாடகக் குழுவினர் வேறு வழியின்றி நெல்லையிலிருந்து திண்டுக்கல் நகர் நோக்கி நகர்ந்தனர்.
திண்டுக்கல்லில் முகாமிட்ட குழுவினர் என்ன நாடகம் நடத்துவது என்கிற ஆலோசனையில் இறங்கியனார்கள். ஜெகந்நாத ஐயரின் கம்பெனியில் பிரசித்திபெற்று விளங்கிய “பக்த ராமராஸ்” – எனும் நாடகத்தை நடத்த கிருஷ்ணனுக்குப் பெருவிருப்பம். அதற்கான பொறுப்புகளையும் தானே ஏற்பதாகவும் சொன்னார். கம்பெனியில் அப்போது பொருளாதார நெருக்கடி கடுமையாக இருந்தது. புதிய நாடகம் போடுவதென்றால் புதிய காட்சிகளுக்கான ஜோடனைகள் உருவாக்கியாக வேண்டும். ஆனால் செலவழிக்கப் பணமில்லை. எனவே, பழைய படுதாக்களையே இந்தப் புதிய நாடகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், பக்த ராமதாசரைச் சிறை வைக்கும் காட்சிக்கு மட்டும் புதிய படுதா அவசியமாக இருந்தது.
அப்போது கம்பெனியில் ஓவியர் ஒருவரும் பணியில் இல்லை. எனவே, கிருஷ்ணனே சிறைச்சாலை ஓவியத்தைப் புதிய படுதாவில் வரைய முடிவு செய்தார். அதையும் ஒரே இரவில் மிகவும் அருமையாக வரைந்துவிட்டார் அவர். பக்த ராமதாஸ் நாடகத்தின் சிறப்பு அது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அமைந்ததாக இருந்தது. டி. கே. சங்கரன் நவாப் தானிஷாவாக வேடமேற்றார். டி.கே. சண்முகத்துக்கு ராமதாசர் வேடம். இந்த நாடகத்தில் கிருஷ்ணனுக்கோ பத்து வேடங்கள்.
பத்து வேடங்களிலும் கிருஷ்ணனின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் கிருஷ்ணனுக்கு மிகவும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது இந்த பக்த ராமதாஸ். நாடகத்துக்கும் ரசிகர்களிடத்தில் மிகவும் நல்ல பெயர் கிடைத்தது. இத்தனை இருந்தும் நாடகம் நல்ல வசூலைப் பெற்றுத் தரவில்லை. திண்டுக்கல்லை விட்டு வேறு சில ஊர்களில் முகாமிட்டும் வசூலைப் பெற முடியவில்லை.
இந்தச் சமயத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. கலை உலகின் வரலாற்றில் எப்போதும் கண்டிராத உன்னத அதிசயம் அது. அறிவியலுடன் கலையானது கை கோர்த்துக்கொண்டு அந்த இணைவின் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியை உலகம் கண்டு வியந்த அற்புதப்  பொழுது அது. ஆமாம்… அப்போது வரையில் சப்தம் ஏதுமின்றி, சலனப் படமாக மட்டுமே மக்களிடையே புழங்கிவந்த சினிமா எனும் மேன்மை மிகுந்த அந்த அறிவியற்கலையானது பேசத் தொடங்கிய அதிஅற்புத அதிசய நிகழ்வுதான் அது.
1895 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் பாரிஸ் நகரில் லூமியர் சகோதரர்கள் முதன்முதலாக சினிமாவைத் திரையிட்டுக் காட்டியது தொடங்கி, உலகம் முழுதும் வலம் வந்த பேசாத சினிமா பேசத் தொடங்கியது 1931 ஆம் ஆண்டில்தான். உலகின் சினிமா பேசத் தொடங்கியபோது நம் இந்திய சினிமா பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் பாடவும் தொடங்கிவிட்டது. அப்போதெல்லாம் அறுபது பாடல்கள், எழுபது பாடல்கள் என்று சுவரொட்டி விளம்பரங்களில் ரசிகர்களை சினிமா கொட்டகைகளுக்கு ஈர்த்தன நம் இந்திய – தமிழ் சினிமாவின் பாடல்கள்.
அப்போதுவரையில் பேசாத படங்களில் நடிப்பதை அத்தனை கௌரவமாகக் கருதாத நாடகக் கலைஞர்கள் சினிமா பேசத் தொடங்கியபோது இசையிலும் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்களாக பேசும்படத்தில் தங்கள் முகங்காட்ட வரிசையாகக் கிளம்பிவிட்டார்கள்.
பேசும் சினிமாவின் வரவால் நாடகக் கலை நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்துவிட்டது. புதிய உத்திகள், நவீன சமகாலக் கதையாடல்கள், யதார்த்த பாணிக் கதை சொல்லும் முறை என்றெல்லாம் நாடகத்தைத் தரமுயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது சினிமாவின் வீர்யமிக்க வரவு.
இருந்தபோதிலும் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழு தடுமாறத்தான் செய்தது.
( கலைப் பயணம் தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11  | பகுதி – 12  | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...