தில்லியில் வரலாறு காணாத குளிர்!வெப்பநிலை 4.2 டிகிரி ஆக குறைந்தது
தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது:
தில்லியில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. பல்வேறு இடங்கள் பனிமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரியாக உள்ளது. முன்னதாக 1901ம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலையாக 17.3 என பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக இம்மாதத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தில்லியில் வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி ஆக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இன்னும் ஒரு சில தினங்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும் என்றும், ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடும் குளிர் நிலவுவதால் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பியின் சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.