அமைதி மணம் கமழும் பூஜை அறை

 அமைதி மணம் கமழும் பூஜை அறை
வீட்டின் முக்கியமான அறையாகப் பெரும்பாலானவர்கள் பூஜை அறையைக் கருதுகிறார்கள். பூஜை அறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பக்தி மணம் கமழும்படி அதை வடிவமைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். 

பூஜை அறையை அமைதி, பக்தி, அழகுடன் வடிவமைக்கச் சில ஆலோசனைகள்:

சுவரின் வண்ணம்! 
பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப் படுத்தும் இயல்புடையவையாக இருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பூஜை அறை சிறியதாக இருப்பதால், மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். வெளிர் மஞ்சள், வெளிர் ஆரஞ்சு போன்ற வண்ணங்கள் பூஜை அறையை அமைதியாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.

தனித்துவமான கதவு! 
பூஜை அறையின் கதவைத் தனித்துவமாக வடிவமைப்பது சிறந்தது. பூஜை அறைக் கதவைக் கூடுமானவரை மரச் சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைப்பது சிறப்பானது. பாரம்பரியமான பூஜை அறைத் தோற்றத்தை விரும்புபவர்கள் மர வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். நவீனத் தோற்றத்தை விரும்புபவர்கள் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடிக் கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். பூஜை அறை எப்போதுமே திறந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை இந்தக் கண்ணாடிக் கதவு கொடுக்கும்.
வெளிச்சம்! பூஜை அறைக்கு நேர்மறையான தோற்றத்தைக் கொடுக்கும் ஆற்றல் விளக்குகளுக்கு உண்டு. பெரும்பாலும், பூஜை அறைக்கு விளக்குகளைச் சர விளக்குகளாகத் தேர்ந்தெடுக்கலாம். எல்ஐடி சர விளக்குகளால் பூஜை அறையின் நுழைவாயிலை அலங்கரிப்பது பொருத்தமாக இருக்கும். சிறிய பேட்டரி விளக்குகளும் (tea lights) பூஜை அறையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவையாக இருக்கும். கூரையில் தொங்கும் சர விளக்கும் பூஜை அறையின் வெளிச்சத்தை அழகாக்க உதவும்.

தரை அலங்காரம்! 
பூஜை அறையின் தரையைப் பெரும்பாலும் கோலத்தால் அலங்கரிப்பதுதான் வழக்கம். தரையின் வண்ணத்துக்கு ஏற்றபடி பாரம்பரியமான கோல ஸ்டிக்கர்கள் ஒட்டுவதும் இப்போது பிரபலமாக இருக்கிறது. பாரம்பரிய வடிவமைப்பிலான தரைவிரிப்பையும் பூஜை அறையில் பயன்படுத்தலாம். மலர் அலங்காரம் பிடித்தவர்கள், தரையில் மலர் அலங்காரம் செய்யலாம்.

அழகான பின்னணி அலங்காரம்! 
பூஜை அறை சுவரில் கோயில் மண்டபத்தைப் போன்ற பின்னணி வடிவமைப்பை உருவாக்கலாம். அப்படியில்லாவிட்டால், வெள்ளை நிறப் பின்னணிச் சுவரில், புடைப்புச் சிற்பங்களை வடிவமைக்கலாம்.

பித்தளைப் பொருட்கள்! 
பூஜை அறையில் பித்தளை விளக்குகள், மணி போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. பூஜை அறைக்குப் பாரம்பரியமான தோற்றத்தை பித்தளையாலான பொருட்கள் கொடுக்கும். பூஜை அறையில் மர வேலைப்பாடுகள் நிறைந்த சட்டகங்களைப் பயன்படுத்துவதும் பாரம்பரியமான தோற்றத்தைக் கொடுக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...