மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் ….

மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தில் என்னதான் விசேஷம்?

”ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமிநாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.

இதே போல் மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும். இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர்.

நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.”

“ஏன் எல்லா விரதங்களிலும் பெண்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்?” 
“பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது நம் சாஸ்திரங்களும் வேதங்களும். ஒரு பெண் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.”

“பெண்கள் அதிகாலையில் கோலமிடுவதன் தத்துவம் என்ன?”
“எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்து செய்யும் தவறுகள் ஒரு பக்கம், அறியாமல் செய்யும் தவறுகள் மறுபக்கம். நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தானே? இதனால் எழும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தில் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. 

மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள் அகலும்.”

”மார்கழிக் கோலத்தில் சாணம் வைப்பது ஏன்?”
”பசு மாட்டின் சாணம் அற்புத பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. நம் வீட்டைச் சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது சாணம். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள்.”

”சாணத்தின் மேல் பூ வைப்பது எதற்காக?”
”சாணத்தின் மீது வைக்கும் பூக்களின் தேனை உறிஞ்சுவதற்காக வரும் தேனீக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமின்றி, சாணத்தின் பயனால் அந்தத் தேனீயின் விஷமும் எடுக்கப்படுகிறது.

இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன் காசு தராமலேயே யோகாவை செய்த பலனும் கிட்டும். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும் கூர்மையாகும்.”

“பாவை நோன்பு இருந்தால் திருமணம் கைகூடும் என்று சொல்வது ஏன்?”
அறிவியல் சார் பதில்:  அதிகாலை எழுந்து ஒரு மனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற ஆழ் மனது நம்பிக்கையுடன், பரிசுத்தமான காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும் போது அப்பெண்ணிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் மேம்பட்டு அவள் நினைத்த காரியம் கைகூடும். அதாவது நல்ல கணவனை அடையும் வழி கிடைக்கும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!