ஜூலை 4ம் தேதி பிரிட்டனில் பொதுத்தேர்தல்..!
பிரிட்டனில் ஜூலை 4ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியினரான ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று பிரிட்டனில் அமைச்சரவை கூடியது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ரிஷி சுனக், ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியும் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது. அத்துடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.