கலைவாணர் எனும் மா கலைஞன் – 6 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன்
6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்…
டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ். சகோதரர்களின் தாய்மாமன் செல்லம்பிள்ளையுடன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஏதோவொரு விசயத்தில் கருத்து முரண்பாடு வந்துவிட்டது. கிருஷ்ணனால் தொடர்ந்து அங்கே இருக்க இயலவில்லை. எனவே, இன்னொரு பிரபல நாடகக் குழுவான மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபாவில் போய்ச் சேர்ந்தார். அது மதுரை ஜெகந்நாத ஐயர் நடத்திவந்த நாடகக் கம்பெனி.
கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்து வந்த தமிழ் நாடகம், அரங்க மரபிற்கேற்ப உருப்பெற்று நிலைக்கத் தொடங்கியது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதனால்தான் தமிழ் நாடகத்தின் தலைமை ஆசானாக சங்கரதாஸ் சுவாமிகளைக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், நடிகவேள் எம்.ஆர். ராதா இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்தொன்றை முன்வைப்பவராக இருந்தார். தமிழ் நாடக உலகில் மதிக்கத்தக்க முன்னோடி ஜெகந்நாத ஐயர்தாம் என்பது நடிகவேளின் கருத்தாக இருந்தது.
நடிகவேள் உடன் எழுத்தாளர் விந்தன் உரையாடும் “சிறைச்சாலை சிந்தனைகள்” – என்னும் நூலில் மூன்றாவது அத்தியாயம் இப்படி விரிகிறது பாருங்கள்:
“….. இப்போது சொல்ல வேடிக்கையாயிருக்கிறது. அப்போது வேதனையாயிருந்திருக்கும்… அந்த வேதனையைப் பொறுக்க முடியாமல் என் தம்பி வேறே தொழிலுக்குப் போயிட்டான். நான் மட்டும் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர்ந்துட்டேன்.”
“அதுவும் நாடகக் கம்பெனிதானா?”
“ஆமாம். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனின்னா அதுதான். அப்போ ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாயிருந்தது. காலையிலே எழுந்ததும் குளிக்கிறது, தோத்திரப்பாடல் பாடறது, வேளாவேளைக்குச் சாப்பிடறது எல்லாமே அங்கே ஒழுங்கா நடந்து வந்தது. அது மட்டும் இல்லே. சமபந்தி போஜனம்னா அந்தக் காலத்திலே பெரிய விஷயம். அது ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சர்வ சாதாரணம். எந்த விதமான பேதமும் இல்லாம அவர் எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுவார். சில பிராமணப் பிள்ளைக அப்படிச் சாப்பிட மாட்டோம்னு சொல்லும். அதுகளை மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிடச் சொல்லிவிடுவார். எதையும் வற்புறுத்தித் திணிக்க அவர் விரும்பமாட்டார். நான் சந்தித்த முதல் சீர்திருத்தவாதி அவர்தான். அவருடைய கம்பெனியிலேதான் எஸ்.வி. வேங்கடராமன், பி.டி. சம்பந்தம், கே. சாரங்கபாணி, சி.எஸ். ஜெயராமன், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம் எல்லாரும் இருந்தாக.”
“கிட்டப்பா இல்லையா?”
“அவரும் ஒரு சமயம் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர வந்தார். ஆனா அவர் மட்டும் வரல்லே; அஞ்சி அண்ணன் தம்பிகளைக் கூட அழைச்சிக்கிட்டு வந்தார். ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாதுன்னு சொல்லி ஐயர் அவரை அனுப்பிவிட்டார்.”
“சங்கரதாஸ் சுவாமிகள்?”
“வருவார், இருப்பார். குடித்துவிட்டு ஆடினால், இது நமக்குப் பிடிக்காது; நீ போய்ட்டு வா என்று ஐயர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”
“அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?”
“அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்கு தடையில்லாமல் எழுதுவார். அதெல்லாம் சரி. ஆனா இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர, நாடக உலகத்துக்கு ஒருநாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாரவது இருந்தால் அது ஜகந்நாதய்யராய்த்தான் இருக்க முடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழிவழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது.”
இப்படியெல்லாம் நடிகவேள் எம்.ஆர். ராதாவால் பெரிதும் மதிக்கப்பட்ட இப்பேர்ப்பட்ட ஜெகந்நாத ஐயர் குழுவில்தான் செல்லம்பிள்ளையுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக என்.எஸ். கிருஷ்ணன் வந்து சேர்ந்தார். அவர் அங்கு சேரும்போது எம்.ஆர். ராதா அங்கிருந்தார். ராதா வெறும் நடிகராக மட்டுமில்லாமல் கார் ஓட்டுநராகவும், மெக்கானிக்காகவும், எலக்டிரீசியனாகவும் இருந்தார். கார் ஓட்டவும், பழுது பார்க்கவும் கிருஷ்ணனுக்கு ராதா கற்றுத்தந்தார்.
ஜெகந்நாத ஐயரின் குழுவில் இருந்தாலும் மனம் முழுதும் டி.கே.எஸ். குழுவே நிறைந்திருந்தது கிருஷ்ணனுக்கு. ஒருநாள் யாரிடத்திலும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிய கிருஷ்ணன் அப்போது கொல்லத்தில் முகாமிட்டிருந்த டி.கே.எஸ். குழுவில் மறுபடியும் போய்ச் சேர்ந்துவிட்டார். அவரின் பின்னாலேயே போலீஸ் வந்து கிருஷ்ணனின் கைகளில் விலங்கிட்டு அழைத்துச் சென்றது.
இதற்கும் ஜெகந்நாத ஐயரே காரணம். தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிடும் கலைஞர்களின் மீது திருட்டுப் புகார் கொடுப்பது அவரது வழக்கமாக இருந்தது. கைகளில் விலங்கோடு கொல்லத்திலிருந்து அழைத்து வரப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணனுடன் ஜெ கந்நாதர் சமாதானம் பேசினார். அதன்படி கிருஷ்ணன் மீண்டும் மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபாவிலேயே தனது பணியைத் தொடர்ந்தார். தான் தந்த புகாரைத் திரும்பப் பெற்றார் ஐயர்.
( கலைப் பயணம் தொடரும்)