காயிதே மில்லத் காலமான நாளின்று
கண்ணியமிகு காயிதே மில்லத் காலமான நாளின்று
கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் 50-வது நினைவுநாள் (05-04-1972) இன்று .
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது; நல்ல உத்தமமான மனிதர்; முஸ்லிம் சமுதாயத்திற்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்.
சென்னை புது கல்லூரியில் (Chennai New College) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணியமிக்கத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் உடலை பார்க்க நேரில் வந்த தந்தை பெரியார் அவர்கள் கூறிய வரிகள் தாம் இவை. இவ்வரிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பெருமையை தன் வாழ்நாளில் வாழ்ந்தும், செயல்பட்டும் பெற்றவர் கண்ணியமிக்கத் தலைவர் காயிதே மில்லத்.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், இந்திய நாடாளுமன்ற இருசபைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அன்றைய சென்னை மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பல சிறப்பியல்புகள் கொண்ட காயிதே மில்லத் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளரும் கூட. “இஸ்லாம் எங்கள் வழி; இன்பத்தமிழ் எங்கள் மொழி. இதுவே தமிழ் முஸ்லிம்களின் முழக்கம்” என்று முழங்கியவர். 1968-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு ‘ அரபு நாடுகளுடன் தமிழர்கள் தொடர்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் ஸ்ரீ ராமேஸ்வர ஆனந்த் என்ற உறுப்பினர் ஐயா காயிதே மில்லத் அவர்களை பார்த்து “உருதுவில் பேசுங்கள்” என்று உள்நோக்கத்தோடு கூறியபோது, “எனக்கு இந்தியும் அந்நிய மொழி, உர்தூவும் (உருதுவும்) அந்நியமொழியே; இந்த அவையில் உள்ள உறுப்பினர்களில் பலர் நிலைமையும் இதே போன்றதே. எனது தாய்மொழியான தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே என்னால் சரளமாக பேச முடியும்.” என்று கூறினார்.
1949-ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் இந்திய ஆட்சிமொழி பற்றி கூறும்போது, “ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.
அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ் தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.
அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாக தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதேநேரம் ஒற்றை ஆட்சி மொழியை அவர் ஏற்றுக் கொண்டாருமில்லை. 1963-ம் ஆண்டு நாடாளுமன்ற உரையில் “மொழி என்பது உணர்ச்சிபூர்வமானது. ஒருவன் வாழ்க்கை முழுவதிலும் அது பிரதிபலிக்கிறது. தொட்டு நிற்கிறது. எனவே இதுகுறித்து விளையாட்டாகவோ மேம்போக்காகவோ பேசிவிட்டு நிறுத்திவிட முடியாது.
ஒரு மொழியை மட்டும் மத்திய அரசு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் அந்த மொழியைப் பேசுகிறவர்கள் மட்டும் ஆட்சியாளர்களாகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆளப்படுபவர் களாகவும் ஆகிவிடுவார்கள்.
ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக வேண்டுமா? அல்லது இந்நாட்டின் ஒற்றுமை முக்கியமா? இதுதான் இன்று கேள்வி.” என்று முழங்கினார்.
தன் தலைமையில் இயங்கிய கட்சியை உடைக்க பலர் முயன்ற போதும், இந்திய ஒன்றிய அரசு கட்சியை கலைக்க முயன்ற போதும், பல அவதூறுகளை அள்ளி வீசிய போதும் கலங்காமல் எதிர்ப்புக்களை களம் கண்டவர் கண்ணியமிக்கத் தலைவர் காயிதே மில்லத் அவர்கள்.