பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}
வாழ்க்கையில் பல தருணங்களில் முதுமை பற்றிய எண்ண ஓட்டங்களை கண்டு நாம் ஏங்கியிருப்போம், இன்பமாயினும் துன்பமாயினும் முதுமையில் சரியாகிவிடும் என்ற அற்ப நம்பிக்கை நம்மில் எல்லோரிடத்திலுமுண்டு.
அம்முதுமைப் பக்கங்களில் நாம் நேரத்தை கடக்க உதவுவதில் நினைவுகளை நிச்சயம்அதில் சேர்க்கவேண்டியிருக்கிறது. அனுபவங்கள் பல அதுவே பலருக்கு அறிவுரையாகவும் மிரட்சியாகவும் இருக்கலாம்.
பென் நெவிஸ் மலைமுகட்டை தொட்டுவிட்ட அலாதி மகிழ்ச்சியில் குகையில் இருந்தோம். கண்ணேதிரே பனிப்புயலின் வீரியம் அதிகரிப்பதை குகையின் நுழைவுவாயில் வழியாக தெரிந்தாலும் மனம் இன்னும் மகிழ்ச்சியை கடந்து நிகழ்வுக்கு வராததால் பயமறியாது இருந்தேன்.
மலையிறங்கும் பொருட்டு குகையை விட்டு முரளி, சூரியா, விக்கி மற்றும் நான் என நாங்க நால்வரும் வந்தோம்.
இயற்கை சீற்றத்தில் அன்றுவரை சொல்லாடலகவே கேட்கப் பட்டுக்கொண்டிருந்த பனிப்புயிலை கண்டதும் மனம் கலக்கம்கண்டது…
நடையை தொடங்குகையில் புகைப்படம் எடுக்க விரும்பினேன். மலைமுகட்டில், இறு க்கநிலையில் கையுறையை கழட்டிய விநாடிகளில் குளிர் காற்று கையை கொல்லத் தொடங்கிவிட்டது.விட முடியாத ஆசையால் கைப்பேசியில் ஒளி நாடா ஒன்றை எடுத்து விட்டு மெள்ள குகையில் இருந்து கீழிறங்கி இரும்பு குச்சியை ஊன்றி முதலடி எடுத்து வைத்த போது சூரி பயம் கொண்டான்.
இந்த நிலையில் நாம் போகவேண்டாம் என்று பயந்து மீண்டும் குகைக்குள் சென்றுவிட்டான். ஏறத்தாழ அழும் நிலைக்கு சென்றுவிட்டான். எனக்கோ மனம் பதபதைக்க ஆரம்பித்து விட்டது. நான் விக்கியை அவனை கவனி க்கும்படி சொல்லி குகைக்குள் செல்லச் சொன்னப்பின்ன ர் திரும்பி பார்க்க,
பனிப்புயல் காற்றின் பேச்சுக்களோ காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தது.அதற்குள் முரளி பத்தடி தூரம் தான் நடந்திருப்பார்.ஆனால் பாதி மறைந்து விட்டார் பனியின் வீசம் அப்படி.அவ்வளவு மோசமான காற்றுடன் பனி வீசவே அருகில் இருப்பவரும் அருகாமையில் இருப்பது போன்றாயிற்று.
இருவர் குகைக்குள்ளே ஒருவர் வெளியே நடுவில் நான் நிற்க மனமோ கோழையின் உடலில் புகுந்தாற் போலானது.
அந்த கனம் தவறு செய்திட்டோனோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது, அடிப்படையில் எனக்கு என்னவாயினும் அதற்கு நான் பொறு ப்பேற்க தாயாராக இருந்தேன்
ஆனால் இப்போதோ இருவர் குகைக்குள்ளே ஒருவர் வெளியே. எந்த பக்கம் காலடி வைப்பதென்ற குழப்பம். அதை நினைக்கவே மனம் ஏதோ கடலின் நடுவே எத்திசை நீச்சல் அடிக்க வேண்டுமென்று தெரியாதவன் போலாயிற்று.
இவையனைத்தும் மனதில் சில நொடிகளுக்குள் ஓடிக்கொண்டிருந்தவை, சூழலும் எனக்கு வெகு நேரம் கொடுக்கவில்லை காற்றால் காதுகள் வலிக்க தொடங்கின உடம்பும் மூன்று அடுக்கு உடுப்புகளைத்தாண்டி குளிரத் தொடங்கியது, சட்டென முடிவொன்றெடுத்தேன் அதுவே சரியென நினைத்தேன், முரளியுடன் செல்வோமென்று ஒருவரை தனியே விட மனமில்லை.சூரிக்காவது விக்கி அருகில் இருக்கிறார் அவனை மனதளவில் தேற்றிடுவார் எனவே அவரிடம் அவனைப் பார்த்து அழைத்து வரும்படி அறிவுரை கூறி அரைமனதுடன் முரளியை நோக்கி நடந்தேன்.
ஏதோ ஒரு வேகத்தில் வேகமாய் நடந்தேன். முடிவு எடுக்கும் முன்னே வெளியே அடித்த புயல் எடுத்தப்பின் மனதிற்குள் அடிக்க ஆரம்பித்து விட்டது. அவர்களை இந்தச் சூழ்நிலையில் விட்டு வரவும் மனமில்லை தனியாய் ஒருவர் செல்வதை பார்க்கவும் மனமில்லை. முடிவு என் மனதை நிறைய தின்றது
அது சரி இல்லை தவறு என்ற என்னுடைய கேள்விகளே என்னை கொன்று கொண்டிருந்தது. யோசித்துக்கொண்டே முரளியின் அருகில் சென்றேன். நான் மட்டும் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்ற அவர் அவர்களை பற்றி கேட்க நிலையைச் சொல்ல, நிலைகுலைந்து நின்றோம்.
நடந்து வந்த தூரத்தினின்று திரும்பி பார்க்க வெள்ள நிறத்தில் நகரும் திரை மட்டுமே தெரிந்தது, மனப்புயலில் பனிப்புயலை மறந்து ட்டேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. இயற்கை அங்கேயும் எங்களுக்கு முடிவெடுக்க நேரம் கொடுக்கவில்லை சட்டென எடுத்த முடிவாய் கீழே இறங்க முடிவு செய்தோம். அக்கணமே என் ஆழ்மனதில் மேலே ஏறுவதைவிட கீழிறங்குவது அல்லது சறுக்கல் கடினம் என்று நான் எழுதக்கொண்டப் பயம் பற்றிக்கொண்டது.
கண் காணுமிடமெல்லாம் பனி மட்டுமே இருக்கிறது, சின்னஞ்சிறு மலைமுகடுகளை அடையாளமாக கொண்டே மேலேறியவன் அதன் உதவியோடே கீழிறங்கவும் நினைத்தேன் ஆனால் பனிப்புயல் அதன் குரோதத்தை காட்டியதில் முகடுகளில் முக்கால்வாசி அளவிற்கு பனி நின்று கொண்டிருக்கிறது.
பெரிய சறுக்கல் ஒன்று இருக்க முரளி அவர் வேகத்தில் இறங்க நானோ நடக்க பழகிய பச்சிளம் குழந்தை போல் அடிக்கு அடி அத்தனை பதட்டம், பயம், ஆசையுடன் ஆமை வேகத்தில் எடுத்து வைத்தேன். என் பயத்தை மேலும் அதிகரிக்க பனி புயல் காற்று வேறு அவ்வப்போது வேகமாய் வீச அசையாத கல் போல் நின்று காற்று நிற்கும் அந்த இடைவெளியில் அடுத்தடி எடுத்து வைத்தேன். இந்த ஈரடி களை நான் எடுத்து வைப்பதற்குள் முரளி அந்த சறுக்கலை முடித்து திரும்பி என்னை பார்த்தார்.
எனக்கோ என்னை அறியாது பதட்டம் அதிகரித்து கொண்டிருந்தது, மனதை திடப்படுத்தி கொண்டு இரண்டு மூன்று அடி வேகமாக எடுத்து வைத்து இறங்கினேன் அதில் ஒரு நம்பிக்கை பிறக்க இடது காலை ஊன்றி இழுக்கையில் பலத்த காற்று வீசியதில் இரும்பென நிற்க நினைத்து என் மொத்த எடையையும் வலது கால் தாங்க, இடுப்பில் வலி பிறந்தது. அந்த கணம் அது பெரிதாய் தெரியவில்லை கவனம் முழுவதும் காற்று நிற்க காத்திருந்து. அந்த மலையை விட்டு இறங்குவதிலேயே இருந்தது. குறிப்பிட்ட தூரத்தை கடந்தோம் ஆனால் வந்த பாதையை பனி தின்று விட்டதால் பனி தந்த பாதையில் வந்த திசையில் நடந்தோம்.
எனக்கோ ஏறுவதை காட்டிலும் இறங்குவது பெரிய போராட்டமாய் இருக்க எனக்காக முரளி நிற்பதும் சரியென படவில்லை. எனினும் அவரை தனியாகச் செல்லுங்கள் என்று சொல்ல மனமில்லை ஏனெனில் வந்தப் பாதையும் திசையும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் குழப்பம்கொண்டது.
மனதில் பல எண்ணங்கள் ஓட்டமெடுக்க தொடங்கின மேலே இருக்கும் விக்கியும் சூரியும் எப்படி வருவர் பனியின் தாக்கம் இறங்க இறங்க குறைந்து கொண்டிருந்தது அதே போல் அவர்களும் நடையை தொடங்கினால் வந்துவிடலாம் இல்லை அவர்கள் வராமல் போனால் என்ன செய்வது அங்கே நிலைமை எப்படி உள்ளதென்று மனம் மனதை கேட்டுக்கொண்டுதான் இருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் உண்மையில் ரசிக்க மறந்தேன் என்பதே மெய்,
தஞ்சையில் முள்க்காட்டில் பிறந்து வெய்யோனை மட்டும் பார்த்து அவ் வகையில் மார்கழி தை திங்கள்களில் ஓரிரு நாள் வரப்பில் இருக்கும் பனிப்போர்த்திய புல்லில் நட்பதே குளுமையின் உச்சம் என வழந்தவனுக்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வட துருவத்தின் அருகாமையில் இருக்கும் குளிர் பிரதேசத்தில் அதனின் மலையுச்சியில் பனிப்புயலால் கண்களுக்கு வெள்ளைப் போர்வையால் மூடியிருப்பதை காண கிட்டியது எனக்கு பெரிய வரமே கூடவே மிகுந்த பயமுமே.
இரும்பு குச்சிகளின் இறுக்கத்தை பொருத்தே நாங்கள் அடிகளை தொடர்ந்தோம், இருவருக்கும் நாங்கள் வந்த பாதையில் இறங்கவில்லையென்பது மட்டும் உறுதியானது, அதில் பயமென்னவென்றால் வைக்கும் காலடி பாறையை கடந்து இருக்கும் பனியில் வைத்தால் பனியுடன் சேர்ந்து பல்லாயிரம் அடி உயரத்தில் இருந்து நாமும் விழுவோம், கூடுதலாக இறந்தால் கூட பரவாயில்லை உயிர் போகாமல் ஏடா கூடா மாக உடல் சிதைந்து உயிர் வா ழ் வது ஒவ்வொருவருக்கும் மனத்துக்கமாகிவிடும்.
திசையை, பயத்தை மட்டும் கருத்தில் கொண்டு நடந்தோம் ஓரிடத்தில் மனம் வேண்டாம் கூற ஒரு சறுக்களில் இருவரும் நிற்க, எங்கள் இடப்புற த்திலிருந்து ஒரு குரல் கேட்டது அவர்கள் அந்த பனிமலையை ரசித்து சறுக்கி விளையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் வலப் புரத்தில் வெகுதொலைவில் அதே போன்று இருவர் இருந்தனர். வெகு நேரம் கழித்து நாங்கள் கண்டது இவர்களை மட்டுமே. நாங்கள் பாதைக்கு தடுமாறுவதை உணர்ந்த அவர்கள் எங்களிடம் நீங்கள் பாதை தாண்டி செல்கீறீர்கள் நீங்கள் கீழே இறங்க வேண்டுமா என்று கேட்க ஆமென்று கூற அவர் பாதை அதுவல்ல என்று இடப்புறத்தில் நகர்ந்து வரும் படி அறிவுறு த்தினார்
அவர்கள் கேட்டது உங்களுக்கு இதுவென்ன கேள்வியென நினைக்கலாம் ஆனால் அங்குள்ளோர்க்கு பனிச்சறுக்கு அது உகந்த நேரம் என்பதால் அதை கேட்டனர், ஏனெனில் நாங்கள் மலையேறும் போதே கணிசமானோர் மலையேறா மல் சறுக்கி விளையாடி கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறி அவரகள் கூறிய பாதையில் நடந்தோம். முரளி அவர் வேகம் தொட்டு முன்னேரே சென்று பாதையை பார்த்து அவர் கண்டுகொண்டார் சரியான பாதையென்று.ஏனெனில் அவர் ஏற்கனவே வந்த அனுபவம் உதவிற்று, நானோ அவர் பேச்சிற்கு மறுபேச்சன்றி அந்த பாதையில் சென்றேன்.
இறங்க ஆரம்பித்தபின் முதல்முறை தொண்டை வறண்டது, முரளி பாதையை சரிபார்த்து எனக்கும் ஞாபகம் வரச்செய்தார். தாகம் தணித்து நடையை கட்டினோம். வளைவு நெளிவான பாதையை அடைந்தோம் எனக்குள் மிக்க மகிழ்ச்சி ஓர் பெரிய கடினத்தை தாண்டியது போன்ற பேரின்பம்.
அவ்விடத்தில் புயல்காற்றில்லை ஏனெனில் பெருங்காற்றை அந்த மலை தடுத்தது.
சுற்றம் அமைதிகாண அங்கே மனமோ மோதிக்கொண்டது.
ஒருவளைவு கடந்திருப்போம் விக்கி சூரியை நினைத்து மனம் வாடிக்கொண்டிருந்தது அப்போதே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது
-அரவிந்த் அண்ணாத்துரை