இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்:
சென்னை : ‘இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், ராணுவ குவிப்புக்கும், தமிழ் பெயர்களை அழிப்பதற்கும், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய ராணுத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர் என, அறிவிக்கப் பட்டுள்ளது.தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப் படுகின்றன. இவை, கண்டத்துக்குரியவை.
தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை அதிகரித்து இருப்பது அநியாயம். இந்த தாக்குதல், உலகத் தமிழர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இலங்கை தமிழர்கள், அரசியலமைப்பு சட்ட ரீதியிலான உரிமைகளுடனும் அமைதியாக வாழ, அவர்கள் விரும்பும் தீர்வு ஏற்படுத்துவதற்கும், பிரதமர் மோடி ஆவன செய்ய வேண்டும்.
தமக்கு ஓட்டு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் என, வேறுபடுத்தி பார்க்காமல், அனைவரிடத்தும் சமமாக நடந்து கொள்வேன் என, கோத்தபயா ராஜபக்சே அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்திட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையை, கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். அவர், கோத்தபயா ராஜபக்சே உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீயை அணைத்து, அவரை நல்வழிப்படுத்த வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை, கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி பெரிதும் வலியுறுத்துவார் என, நம்புகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடிதி.மு.க., அமைப்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தன்னை ஏதோ, ‘ஆக்டிங் முதல்வர்’ போல கருதி, அனைத்து துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வது, அதிகப் பிரசங்கித்தனம் என்பதை விட, அவசரமாக அரிதாரம் பூசிய மோகத்தில் போடும் போலி நாடகம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தரக்குறைவாக, ஸ்டாலினை பார்த்து விமர்சனம் செய்கிறார். அமைச்சர் பச்சைப் பொய் கூறுவது, அ.தி.மு.க., அரசின் வெற்று அறிவிப்பு, வெட்டியான விளம்பரம், விதண்டாவாத அறிக்கைகள் மற்றும் பேட்டிகளிலும் உள்ள, பொய்யும் புரட்டும் போலவே இருக்கிறது. வீணாக அனைத்து துறைகளின் பிரச்னைகளிலும், மூக்கை நுழைத்து, ஸ்டாலின் குறிப்பிட்டது போல், சூப்பர் முதல்வராக முயற்சிக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
