மராட்டியத்தில் திடீர் பாஜக ஆட்சி: சந்தர்ப்பவாத அரசியல்- டாக்டர் ராமதாஸ் விமர்சனம்; ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
மராட்டியத்தில் திடீர் பாஜக ஆட்சி: சந்தர்ப்பவாத அரசியல்- டாக்டர் ராமதாஸ் விமர்சனம்; ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
மராட்டியத்தில் திடீர் பாஜக ஆட்சி அமைத்ததற்கு சந்தர்ப்பவாத அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். அந்த அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக இன்று காலை ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருமகன் அஜித் பவாரின் முடிவுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று கூறி உள்ளார். தேசிய அளவில் இந்த அரசியல் மாற்றம் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதீய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மராட்டிய மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிசுக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.