வெற்றி முனைப்பில் இந்தியா!

 வெற்றி முனைப்பில் இந்தியா!

   ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேச அணி: வெற்றி முனைப்பில் இந்தியா!


         இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 

            இந்தியப் பந்துவீச்சாளா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். 2-ம் நாளின் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்தது. ஜடேஜா 60, உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 343 ரன்கள் முன்னிலை பெற்றது. 

         இந்நிலையில் இந்திய அணியின் இன்னிங்ஸை 493/6 ரன்களுடன் டிக்ளேர் செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. காலை வேளை வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்த எண்ணி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

       முதல் 5 ஓவர்கள் வரை வங்கதேசத் தொடக்க வீரர்களால் கவனமாக விளையாட முடிந்தது. பிறகு, இம்ருல் கைஸ் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதே ஓவரில் மொமினுல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்த டிஆர்எஸ்-ஸின் உதவியை நாடி தோல்வியடைந்தது இந்திய அணி. அடுத்த ஓவரில் ஷத்மன் இஸ்லாமை 6 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் இஷாந்த் சர்மா. பிறகு மொமினுல் ஹக்கை வீழ்த்த மற்றொருமுறை டிஆர்எஸ்-ஸின் உதவியை நாடி வெற்றி பெற்றார் கோலி.  ஷமி, 7 ரன்களில் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். முகமது மிதுன் 18 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேச அணியின் ஸ்கோர், 44/4.

         இந்த டெஸ்டில் இந்திய அணி ஸ்லிப் கேட்சுகளைப் பிடிப்பதில் மோசமாக உள்ளது. இன்று, முஷ்ஃபிகுர் ரஹிம் அளித்த கேட்சை ஸ்லிப் பகுதியில் தவறவிட்டார் ரோஹித் சர்மா. முஷ்பிகுர் ரஹிமும் மஹ்முதுல்லாவும் உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட்டுகள் விழாமல் முறையே 9 மற்றும் 6 ரன்களை எடுத்தார்கள். 

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி, 22 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. 

     உணவு இடைவேளைக்குப் பிறகு முஷ்ஃபிகுர் ரஹிமும் மஹ்முதுல்லாவும் நிலைமையைச் சரி செய்ய முயன்றார்கள். ஆனால், மஹ்முதுல்லாவை 15 ரன்களில் வெளியேற்றினார் ஷமி. இதன்பிறகு முஷ்ஃபிகுரும் லிடன் தாஸும் வேகமாக ரன்கள் எடுக்க முயன்றார்கள். இதனால் நிறைய பவுண்டரிகள் கிடைத்தன. 39 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த லிடன் தாஸ், பந்துவீசிய அஸ்வினிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முஷ்ஃபிகுர் 101 பந்துகளில் அரை சதமெடுத்தார்.

        3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது வங்கதேச அணி, 2-வது இன்னிங்ஸில் 54 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி 152 ரன்களுக்குப் பின்தங்கியுள்ளது. இதனால் 3-ம் நாளான இன்றே இந்திய அணி வெற்றியைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...