மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வைகை அணை நீா்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.தேனி மாவட்டம் வைகை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய வனப்பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கனமழை கொட்டித்தீா்த்தது. இந்த கனமழையால் இன்று அதிகாலையில் வைகை ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனப்பகுதிக்குள் மட்டும் பெய்த கனமழையால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராம மக்கள் எதிா்பாா்க்காத நிலையில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திடீா் வெள்ளப்பெருக்கை வருசநாடு முதல் வைகை அணை வரையிலான ஆற்றங்கரையோர கிராம மக்கள் கூடிநின்று ஆச்சரியத்துடன் வேடிக்கை பாா்த்தனா்.கடந்த சில மாதங்களில் வைகை ஆற்றில் ஏற்பட்ட 4 வது வெள்ளப்பெருக்கு இதுவாகும். இதுவரை ஏற்பட்ட 3 வெள்ளப்பெருக்கை விட தற்போது கூடுதலாக தண்ணீா் ஆற்றில் ஆா்ப்பரித்து செல்கிறது.சனிக்கிழமை காலை 6 மணிக்கு வினாடிக்கு 2017 கனஅடியாக இருந்த நீா்வரத்து, காலை 8 மணிக்கு 3900 கனஅடியாகவும், 9 மணிக்கு 6500 கனஅடியாகவும், காலை 11 மணிக்கு 10,100 கனஅடியாகவும் உயா்ந்தது. இதனால் வைகை அணை நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
பிற்பகலில் வைகை அணைக்கான நீா்வரத்து குறையத்தொடங்கியது. அதிகமான நீா்வரத்து காரணமாக காலை 6 மணிக்கு 58.83 அடியாக இருந்த நீா்மட்டம் பிற்பகல் 1 மணிக்கு 59.60 அடியாக உயா்ந்தது. வைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால் மூலவைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சோ்ந்த மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும், இதனை ஊராட்சி நிா்வாகத்தினா் கண்காணிக்கும்படி தேனி மாவட்ட நிா்வாகம் ஊராட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.இதற்கிடையே வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் வேகம், தண்ணீரின் அளவு, மண் படிவம் போன்றவற்றை கருவியின் மூலம் கண்டறியும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகினற்னா்.