ஜார்ஜ் வாஷிங்டன்
நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் பர்த் டே டுடே
அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார்.
100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான். அமெரிக்காவின் ஒற்றுமை குலையாமல் கட்டிக்காத்த உறுதிமிக்க தலைவராகத் திகழ்ந்தார். பல துறைகளிலும் அசாதாரண நிர்வாகத் திறனுடன் அமெரிக்காவைக் கட்டமைத்தார்.
ஆதரவு, செல்வாக்கு இருந்தாலும் 3-வது முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இவரது சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப் பட்டுள்ளது அவரது நினைவாகத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இவரது பிறந்தநாள் விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது பல கல்வி நிறுவனங்கள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது
ஜார்ஜ் வாஷிங்டன் பற்றிய பிரபல கதை ஒன்று இன்றும் அமெரிக்காவில் பிரபலம். வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்திருக்கிறார். அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி. மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா… அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.
செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா எனக்குக் கிடைச்சிருக்கிற சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசினதுல எனக்குப் பெரிய சந்தோஷம்…” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது. அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய விஷயத்துக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்.