என்னையும் புதுப்பிக்க…
என்னையும் புதுப்பிக்க..
*************************
நலம் நலமறிய ஆவலில்
தொடங்கியது என் பயணம்
உறவுகளை இணைக்கும்
அன்பு பாலமானேன்
கிராமத்திற்கும் நகரத்திற்குமான
தகவல்களை கொண்டு
சேர்க்கும் தூதுவனாக
இருக்கின்றேன்
தினமும் கருத்தரித்து
தினமும் பிரசவிப்பேன்
மனதின் உணர்வுகளை
சுமப்பதால்
சிவப்பாகவே இருக்கின்றேன்
அறுவை சிகிச்சை செய்து
பிரசவம் பார்க்கும் மருத்துவர்
என்னுயிர் தபால்காரர்
நீண்டதொலைவிலிருக்கும்
தாய்க்கும் மகனுக்குமான
இன்னொரு
தொப்புள்கொடி உறவானேன்
புறாவிற்கும் அன்னத்திற்கும்
ஒய்வு கொடுத்த அதிகாரி நான்
இன்ப துன்பங்களை சுமக்கும்
நம் இதயம் கூட
இன்னொரு தபால்பெட்டிதான்
எல்லா
உறவுகளையும் இணைத்த
நான் இன்று மனக்
குறையோடு புலம்புகின்றேன்
உயிரோட்டமுள்ள செய்திகளை
சுமந்த நான் குப்பைகளுக்கிடையில்
என் இறுதி மூச்சை விடுகின்றேன்
அலைபேசியின் கோபுரங்களால்
நஞ்சைத்தான் சுவாசிக்கின்றேன்
இந்நவீன உலகில்
பழைய வீட்டை புதுப்பிப்பது போல்
பழையகடனை புதுப்பிப்பதுபோல்
பழைய நட்பை புதுப்பிப்பதுபோல்
பழைய உறவை புதுப்பிப்பதுபோல்
பழைய காதலை புதுப்பிப்பதுபோல்
என்னையும் புதுபிக்கமாட்டீர்களா?