கலைவாணர் எனும் மா கலைஞன் – 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்
கலைவாணர் எனும் மா கலைஞன்
3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்…
நாடகமே அந்நாளின் முதல்பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அன்று சினிமா இருந்தாலும் அது பேசவில்லை. பேசாப்பட யுகத்தில் நாடக நடிகர்களுக்குமே அதன்பேரில் ஆர்வம் இருக்கவில்லை. புகைப்படம் சலனப்படம் ஆன நிலையில் அசையும் படத்தை மக்கள் ஆர்வமாகப் பார்த்தார்கள் என்றாலும் நாடகம் வழங்கிய கலை அனுபவத்தை சினிமாவால் வழங்கவே இயலவில்லை அப்போது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தன் இளமைக் காலத்தில் நாடகத்தில் நடிக்கவே பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் என்று பார்த்தோம்.
1924 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் முகாமிட்டிருந்த ஒரு பாய்ஸ் கம்பெனியில் போய் கிருஷ்ணனைச் சேர்த்துவிட்டார் அவரது தந்தையார் சுடலைமுத்து. பாய்ஸ் கம்பெனி என்பது இளைஞர்களைக் கொண்டு இயங்கும் நாடகக் குழு ஆகும். அந்த நாளில் முதன்முதலாக இப்படியான பாய்ஸ் கம்பெனியைத் தொடங்கியவர் நாடகத்துறையின் முன்னோடி, நாடகக் காவலராக, நாடக மேதையாக எல்லோராலும் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள்தான்.
பொதுவாக இன்றுவரையில் தங்கள் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்துவதுதான் பெற்றோர் வழக்கம். நாடகம், சினிமா போன்றவை தங்கள் பிள்ளைகளைக் கெடுத்துவிடும் என்று அஞ்சுகிற பெற்றோரே அதிகம். ஆனால், கிருஷ்ணனின் தந்தைக்கு வேறு விதமாகத் தோன்றியிருக்கிறது. தனது மகனுக்கு – அந்த விளையும் பயிருக்கு நாடகத்தின்மீதுதான் அதிக நாட்டமாக இருக்கிறது என்கிற மிகச் சரியான புரிதல் அவருக்கு இருந்தது எத்துணை வியப்பான ஒன்று பாருங்கள். அப்படியொரு புரிதலை கிருஷ்ணனின் தந்தை சுடலைமுத்து கொண்டிருக்கவில்லையென்றால் என்னவாகியிருக்கும்? ஒருவேளை கலைவாணர் என்கிற ஒரு கலை மேதை நமக்குக் கிடைக்காமலேயேகூடப் பேயிருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அது தமிழர்களின் பேறு என்றும் சொல்லலாம்.
அந்த பாய்ஸ் கம்பெனியில்தான் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டி.எஸ்.துரைராஜ் இருந்தார். அவர்தான் கலையுலகில் கலைவாணருக்குக் கிடைத்த முதல் நண்பர். கிருஷ்ணனின் வேடிக்கைப் பேச்சுக்களுக்கு துரைராஜ் முதல் ரசிகரானார். அதுமட்டுமல்ல, கிருஷ்ணனின் பூப்பந்தாட்டத் திறனைக் கண்டும் துரைராஜ் வியப்புக் கொண்டார். இந்த நட்பு ஒருபுறமிருக்க, விரைவிலேயே கிருஷ்ணன் பாய்ஸ் கம்பெனியை விட்டுவிட்டு வேறொரு நாடகக் குழுவுக்குப் போய்விட்டார். அதுதான் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழு.
டி.கே.எஸ். சகோதரர்கள் நான்கு பேர். அவர்களில் மூத்தவர் டி.கே. சங்கரன். அவரையடுத்து டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி.கே. பகவதி ஆகியோர். இவர்கள் 1925 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் தொடங்கிய நாடகக் குழுவுக்கு மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா என்பது பெயர். நாடகக் குழுவுக்கு வைக்கப்பட்ட இந்தப் பெயரில் இரண்டுவிதமான சுவையான அம்சங்கள் உண்டு. பால சண்முகானந்த சபா என்று வைக்கக் காரணம் சகோதரர்களில் ஒருவரான டி.கே. சண்முகத்தின்மீது மற்ற மூவருக்கும் அத்தனை அன்பு, பாசம். அதன் வெளிப்பாடுதான் அவரது பெயரையே சபாவுக்கு வைத்த இந்தச் செயல். மற்றுமொரு அம்சம் சபாவின் பெயருக்கு முன்னால் மதுரையின் பெயர் இருப்பது. அந்நாளின் வழக்கமாக இது இருந்தது. அதாவது, ஒரு நாடகக் குழு எந்த ஊரைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதற்கு என்ன பெயர் வைத்தாலும் முன்னொட்டாக மதுரை வந்து ஒட்டிக்கொள்ளும். மதுரைதான் அந்நாளில் நாடகக் கலையை வளர்த்தெடுத்த நாற்றங்காலாக, நல் வயலாக இருந்தது. எனவே, மதுரை என்று நாடகக் குழுவின் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது அப்போது பெருவழக்கு.
செல்லம் பிள்ளை என்பவர் டி.கே.எஸ். சகோதரர்களின் தாய்மாமன் ஆவார். தங்கள் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்க சிறுவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வருவது என்பது சகோதரர்களால் செல்லம் பிள்ளைக்குத் தரப்பட்ட பொறுப்பு. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, நாடகத்தில் நாட்டமுள்ள, அழகும் தகுதியும் கொண்ட சிறுவர்களை அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருவனந்தபுரத்துக்கு அழைத்துவரலானார் அவர். என்.எஸ். கிருஷ்ணனும் செல்லம் பிள்ளையால் திருவனந்தபுரம் அழைத்துவரப்பாட்டார். அப்போது அப்படி வந்தவர்கள் மொத்தம் நான்கு சிறுவர்கள். அவர்களில் கிருஷ்ணனுக்கு வயது 17. சிறுவர்களின் மகரக்கட்டு நீங்கி, குரலும் வாலிபத்தை எட்டியிருந்தது. துடிப்புமிக்க இளைஞனாகத் தோற்றமளித்தார் அவர்.
சங்கரதாஸ் சுவாமிகளின், “மூலமந்திர மோன நற்பொருளே…” – எனும் கணபதி வணக்கப் பாடலை மரபார்ந்த வழக்கப்படி முதல் பாடமாக அச் சிறுவர்களுக்கு சண்முகம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். பாடலை சில பல முறை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தபோது தாகமெடுத்தது சண்முகத்திற்கு. புதிய மாணவச் சிறுவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு தண்ணீர் பருகச் சென்றார் சண்முகம். திரும்பிவந்து பார்த்தபோது அவருக்கு ஒரே வியப்பு. தான் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார் இளைஞன் கிருஷ்ணன்.
உனக்கு எப்படித் தெரியும் இந்தப் பாட்டு? – உரத்த குரலில் வியப்போடு கேட்டார் சண்முகம்.
“நாகர்கோவிலில் நாடகக் குழுக்கள் முகாமிடும்போதெல்லாம் அதில் நான் சோடா விற்றுக்கொண்டே நாடகங்களையும் கவனிப்பேன். உங்கள் நாடகக் குழு அங்கு வந்தபோதும் அப்படியே செய்தேன். நடிகர்கள் பாடும் பாடல்களும் வசனங்களும் எனக்கும் மனப்பாடம் ஆகிவிட்டன” – என்றார் பரவசத்தோடு. டி.கே. சண்முகத்துக்கு ஆச்சரியம் அடங்கியபாடில்லை. கிருஷ்ணனின் தோளைத் தட்டிக் கொடுத்தார். முதுகை வளைத்து அணைத்துக்கொண்டார். மகிழ்ச்சியை அவர் முகம் சிரிப்பால் வெளிப்படுத்தியது.
அவர் கிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னார்:
“பலே… இனி நீயே இவர்களுக்குப் பாடம் நடத்து… “
– சொல்லிவிட்டு நடந்தார் சண்முகம்.
இப்போது வியப்பு கிருஷ்ணனைத் தொற்றிக் கொண்டது. மனமெங்கும் மகிழ்ச்சி. தனது கலைத் தாகத்திற்கு முதல் நாளன்றே இப்படியொரு அங்கீகாரமா? நாடகமே தன் இலட்சிய வாழ்வாகப் போகிறது என்று மனமார உணரத் தொடங்கினார். ஒரு உன்னதக் கலைஞனாகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் வேட்கைக்கு இப்படியாகத்தான் வித்திடப்பட்டது. பின்னாளில் கலைவாணர் எனும் பெரும் பெயருடன் தொன்மைவாய்ந்த தமிழின் கலைப் பெருவெளியில் தன் காலத்தில் நகைச்சுவை ரசத்தோடு நற்சிந்தனைகளையும் பகுத்தறிவு எண்ணங்களையும் அள்ளித் தரப்போகிற அந்த உன்னதக் கலைஞனின் நாடக நுழைவு இவ்வாறுதான் தனித்துவம் பெற்றிருந்தது.
ஆமாம்… ஒரு மாணவனாக நடிப்புத் தொழிலைக் கற்றுக்கொள்ள அங்கே நுழைந்த அன்றே ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். இது எத்தனை பெரிய மகத்தான நிகழ்வு! எவருக்குமே கிடைத்திடாத எத்தனை பெரிய மகத்தான பரிசு! அரிய விருது! வெகுமதி!
( கலைப் பயணம் தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |