சூலமங்கலம் சகோதரிகள்

 சூலமங்கலம் சகோதரிகள்

பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சூலமங்கலம் சகோதரிகள்.


சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6


அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது, சவால்விடும் புதுமையாக அமைந்தது.


ஜெயலட்சுமியும் (பிறப்பு – 1937) ராஜலட்சுமியும் ( பிறப்பு 1940) சிறுமிகளாக இருந்தபோதே, ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்ற பெயரில் பிரபலமாகி விட்டார்கள். இசை இரட்டையராக 1950களின் தொடக்கத்தில் அவர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். இன்று சென்னை அடையாற்றின் கரையில் அமர்க்களமாக இயங்கும் ‘காந்தி நகர் கிளப்’, தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியாக சூலமங்கலம் சகோதரிகளைத்தான் ஏற்பாடு செய்தது. அப்போது ஜெயலட்சுமிக்கு 15 வயது, ராஜலட்சுமிக்கு 12!


எண்பதுகளின் இறுதிவரை இந்த சகோதரிகள் பாடாத கோயில் இல்லை, பங்கேற்காத திருவிழா இல்லை. மலேசியா, சிங்கப்பூர் இசைப் பயணத்திற்காக, 1974ல் அவர்கள் சிதம்பரம் கப்பலில் சென்றபோது, கப்பல் கேப்டனின் கோரிக்கையை ஏற்று கப்பலிலேயே நிகழ்ச்சி வழங்கி அசத்தினார்கள். அவர்கள் இசைத்தட்டில் வழங்கிய ‘கந்த சஷ்டி கவசம்’, தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் இன்றும் ஒலிக்கிறது. ‘அழகெல்லாம் முருகனே’ என்றும், ‘முத்துவேல் ரத்தினவேல்’ என்றும், ‘முருகனுக்கு ஒரு நாள் திருநாள்’ என்றும் சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பாடல்களை ஒலிபரப்பி, சிறு கோயில்கள் கூட தங்கள் வைபவங்களுக்கு இசை மணம் சேர்த்துக்கொள்கின்றன.


சகோதரிகள் பாடிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பக்திப் பாடல், குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில், இசைத்தட்டாக முதலில் வந்தது. பிறகு, அது ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. திரை இசையமைப்பாளராக பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் உயர்வதற்கு, அந்தப் பாடல் காரணமாக அமைந்தது. சகோதரிகளின் குரலில் இருந்த காந்த சக்தி, குன்னக்குடிக்குப் புது வாழ்வு தந்தது.


தஞ்சை மண்ணுக்கு இயற்கை வளமும் இசை மணமும் இருந்த காலகட்டத்தில், தஞ்சை டவுனுக்கு அருகே இருக்கும் சூலமங்கலம் கிராமத்தில் இந்த சகோதரிகள் பிறந்தார்கள். தந்தை, கர்ணம் ராமசாமி அய்யர். அம்மா ஜானகி. தன் இரு பெண்களுக்கும் கேட்டதை திருப்பிப்பாடும் திறமை இருப்பதைப் பார்த்த ராமசாமி அய்யர், ஊரில் இருந்த சங்கீத பூஷணம் கே.ஜி. மூர்த்தியிடம் சேர்த்துவிட்டார். சரளி வரிசை, கீதம், வர்ணம் என்று சங்கீதக் கலையின் அஸ்திவாரங்களில் சகோதரிகள் பயிற்சி பெற்றார்கள்.


இந்தியா சுதந்திரம் அடைந்த 1947. தூக்கத்திலேயே ராமசாமி அய்யர் இறந்துவிட்டார். ஒரே நாளில் குடும்பத்தின் நிலை மாறிவிட்டது. சகோதரிகளுக்கு அடுத்து சரஸ்வதி என்ற பெண்ணும் இன்னொரு பையனும் பிறந்திருந்தார்கள். சூலமங்கலம் போன்ற செழிப்பான கிராமத்தில் கூட அவர்களின் வயிற்றைக் கழுவ வழியில்லை. மாமா சாமிநாத அய்யர் குழந்தைகளுடன் மதராஸ பட்டணம் வந்து சேர்ந்தார்.


சென்னையில், இசைத்துறையில் சகோதரிகளுக்கு பத்தமடை கிருஷ்ணன் என்ற சங்கீத மேதை ஆசானாக இருந்து வழிகாட்டினார். பத்தமடை கிருஷ்ணன், முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகளில் நிபுணர். ஜோதிட சிம்மம். திருமணமாகி நெடுநாளுக்குப் பிறகும் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தார் (பின்னாளில்தான் அவரது மகள் காயத்ரி பிறந்தாள்). பாவாடை சட்டையில் வந்த சூலமங்கலம் சகோதரிகளைத் தன்னுடைய மகள்களாக பாவித்து அவர்களுக்கு இசைக்கலையின் நுணுக்கங்களை எல்லாம் நிரம்ப சொல்லிக்கொடுத்தார் பத்தமடை. ‘‘ரொம்ப உயர்ந்த சங்கீதத்தை பத்தமடை கிருஷ்ணன் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். எங்களுக்குக் கிடைச்ச எல்லா புகழுக்கும் காரணமானவர் அவர்தான்,’’ என்று பின்னாளில் சூலமங்கலம் ஜெயலட்சுமி எனக்களித்த பேட்டியில் மனம் திறந்து கூறினார் (‘திரை இசை அலைகள்’, முதல் பாகம், ஆசிரியர்: வாமனன்).


சூலமங்கலம் சகோதரிகள் கர்நாடக சங்கீதத்தின் மீது தனி கவனம் செலுத்தாமல், திரை இசைக்குள் புகுந்து சமரசங்கள் செய்துகொண்டதில் பத்தமடைக்கு வருத்தம் இருந்தது….ஆனால் அவரைப்போல் எளிமையான வாழ்க்கையை சகோதரிகளால் மேற்கொள்ள முடியுமா? புகழும் பணமும் இல்லாமல், கலையின் தரிசனத்தோடு மட்டும் எத்தனைப்பேரால் வாழமுடியும்?


ஆனந்த விகடன் பத்திரிகையின் கேஷியராக இருந்த வைத்தியநாத அய்யரும், ஜெமினி நிறுவனத்தின் இன்னொரு பத்திரிகையான நாரதரின் ஆசிரியர் சீனிவாச ராவும், சகோதரிகளுக்கு உதவ முன்வந்தனர்.


நாரதர் ராவ், தான் நடத்திய ஓர் இன்ஜினியரிங் பொருட்காட்சியில் சகோதரிகளுக்கு மேடை அமைத்துக் கொடுத்தார். ராவின் வரவேற்பை ஏற்று, தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் சங்கீத சிறுமிகளின் கச்சேரியை கேட்க வந்தார்கள்.


விறுவிறுவென்று தொய்வில்லாமல் சென்ற கச்சேரியில், பாடல்கள், ஆலாபனைகள், சுரவரிசைகள் என்று எதிலும் சுவை குறையவில்லை. சகோதரிகளின் திறமையைக் கண்டு வியந்தார் பாகவதர். அவர்களை அழைத்து வாழ்த்தினார். இளையவள் ராஜலட்சுமிக்குப் பத்தமடையிடமிருந்து பாடமாகியிருந்த தீட்சிதர் கிருதிகளை அவளிடமிருந்து தானும் பாடம் செய்து கொண்டார்!


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...