உருவானது ‘புல் புல்’ புயல்!
வங்கக்கடலில் உருவான ‘புல் புல்’ புயல், ஒடிசாவை நோக்கி நகரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, ‘கியார்’ புயல், இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் உருவான ‘மஹா’, புயல் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதிய புயலாக வலுபெற்றுள்ளது.
BUL BUL என்று பாகிஸ்தானால் பெயரிட்டுள்ள அந்தப் புயல், வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்றும், வங்கதேசத்தை ஒட்டி கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் அந்தமான் கடற் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.