மெல்லிசை மன்னரும் – நடிகர் திலகமும்
ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது.
சீண்டலான குரலில், “உன்னை “மெல்லிசை மன்னன்”னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல கிளிஃப் ரிச்சர்ட்னு ஒரு பாடகர்.. நீ கேள்விப்பட்டிருக்க மாட்டே!” என்று சிவாஜி சொல்ல,
“இப்ப அவனுக்கு என்ன?” என்று எம்.எஸ்.வி. கேட்டாராம்.
“அவன் ஸ்லோ ஃபேஸ்ல ஒரு மெலடி பாடி இருக்கான். என்ன பிரமாதமா பாடி இருக்கான் தெரியுமா? அது மாதிரி ஒரு பாட்டு உன்னால டியூன் போட முடியுமா?” என்று சிவாஜி சவால் விடும் தொனியில் கேட்டதும், சுருக்கென்று எம்.எஸ்.விக்கு கோபம் வந்துவிட்டதாம்.
“அப்படி ஒரு பாட்டு போட்டால், அதுக்கு ஏத்தா மாதிரி உங்களால நடிக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டார் எம்.எஸ்.வி.
“நீ போட்டுக் குடு! நான் நடிக்கிறேனா இல்லையான்னு பார்!” என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார் சிவாஜி.
அவ்வளவுதான்! பரபரப்பாகிவிட்டார் எம்.எஸ்.வி.! ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து, அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு டியூனை போட்டு விட்டார். அதற்கு முன்பாகவே கவிஞர் கண்ணதாசனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி விட்டார்.
எனவே, டியூன் ரெடியானதும், அதை டெலிபோனிலேயே போட்டுக்காட்டி, அதற்கேற்றபடியாக ஒரு மென்மையான பாடலையும் எழுதும்படிச் சொல்லிவிட்டார்.