கலைவாணர் எனும் மா கலைஞன் – 1 – சோழ. நாகராஜன்
மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம் என்பது தெரியாது. ஆனால், ஒரேயொரு தமிழ்க் கலைஞர் மட்டும் மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்று கேட்டு, அதற்கொரு இலக்கணமே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
முதலில் அவர் நம்மிடமே ஒரு கேள்வியைக் கேட்கிறார் இப்படி –
மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்?
அவன் அழகாக இருக்கிறான் என்பதாலா?
அவன் அறிவாளி என்பதாலா?
அவன் மிகப் பெரிய பணக்காரன் என்பதாலா?
இவை எதுவுமே இல்லை.
மனிதன் சிரிக்கிறானே…
வாய் விட்டு, மனம் விட்டு, தன்னை மறந்து சிரிக்கிறான் அல்லவா அந்தச் சிரிக்கும் குணத்தால்தான் மனிதன் சிறந்தவனாகிறான். ஏனென்றால், விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரியாது. பறவைகள் சிரிக்காது. இந்த உலகத்தில் மனிதன் மட்டும்தான் சிரிக்கத் தெரிந்தவன். அதனால்தான் அவன் உயர்ந்தவனாகிறான், சிறந்தவனாகிறான் என்று விளக்கினார் அந்தப் பழம்பெரும் நகைச்சுவைக் கலைஞர்.
சிரிப்புக்கே இலக்கணம் வகுத்த பெருமை அவர் ஒருவரையே சேரும். அன்று தொடங்கி இன்று வரையில் இப்படியொரு விளக்கத்தைத் தந்தவரும், சிரிப்பு உள்ளத்துக்கும் உடலுக்கும் ஒரு சிறந்த டானிக் என்று தன் கைப்படவே எழுதிக் கொடுக்கும் இயல்புடையவருமான அந்த மகத்தான கலைஞர் வேறு யாருமல்ல… அவர்தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
தமிழ் நாடக உலகிலும், தமிழ்த் திரைப்பட உலகிலும் தனக்கு இணையில்லாத நகைச்சுவைக் கலைஞர் அவர். கறுப்பு – வெள்ளை சினிமா காலத்தில் தமிழ் ரசிகர்கள் மனங்களில் வண்ண ஜாலம் புரிந்த அற்புதக் கலைஞர் கலைவாணரை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் வாழ்க்கை வரலாற்றை இசைப் பேருரை எனும் நிகழ்ச்சியின் வாயிலாகச் சொல்லிவருவது அன்பர்கள் பலரும் அறிந்ததுதான்.
கலைவாணரின் கதை என்பது சுவை மிகுந்தது. அது இன்றைக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. கலைவாணரின் நாடகப் பங்களிப்புகளும் சரி, சினிமாவில் அவர் பதித்த தடமும் சரி, அவரது சொந்த வாழ்க்கையை அவர் எதிர்கொண்ட விதத்திலும் சரி… கலைவாணரின் கதை என்பது மிக மிகத் தனித்துவம் கொண்ட ஒரு கலைஞனின் வரலாறு. அதனை அறிந்துகொள்கிற எவருக்கும் அது சுவையை மட்டுமல்ல, நல்ல நல்ல செய்திகளையும் அது தரும்.
சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கலைவாணரின் கதை என்பது தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான். கலைவாணரை அறிந்துகொள்வதால் தமிழர்கள் தங்களது கலா ரசனையை வளர்த்துக்கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். கலை என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல… அது சமுதாயத்துக்குப் பயனுள்ள நல்ல கருத்தை வழங்கவும் வேண்டும் என்பதைக் கலைவாணர் தன் வாழ்க்கைச் செய்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆக, தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய, பெருமைப்படத் தக்கதொரு மா கலைஞன் கலைவாணரின் கதையை இந்தத் தொடர் மூலமாக நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். தொடர்ந்து படியுங்கள். என்னோடு தொடர்ந்து பயணியுங்கள். கலைவாணர் என்ற அந்த மகத்தான கலைஞனின் வாழ்க்கை உங்கள் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக, ஒளி விளக்காக நிச்சயம் இருக்கும்.
இந்தியாவிலேயே நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தருவது நமது தமிழ் சினிமாதான். அன்றிலிருந்து இன்றுவரையில் எத்தனை எத்தனை நகைச்சுவைக் கலைஞர்கள், எத்தனை எத்தனை வகைவகையான நகைச்சுவைக் காட்சிகள். இது தமிழ் சினிமாவின் தனித்துவம். மக்கள் மத்தியில் நிலவிய மூட நம்பிக்கைகள், பழமைச் சிந்தனைகள், பிற்போக்குக் கருத்துக்களையெல்லாம் தட்டித் தகர்க்கும் பேராயுதமாக இந்தத் தனித்துவத்தைக் கூர்தீட்டிப் பிரயோகித்த கலை வித்தகர் கலைவாணரின் கதையைத் தொடர்ந்து என்னிடம் கேட்பதற்கு நீங்கள் தயார்தானே?
வாருங்கள். வாரம் தோறும் கலைவாணரின் வாழ்க்கைச் சாகரத்திலிருந்து சுவையும் பயனும் நிறைந்த நல் முத்துக்களை அள்ளியெடுப்போம்…
வாருங்கள்… வாருங்கள்… தொடர்வோம் கலைவாணர் என்ற அந்த மகத்தான கலைஞரின் கரம் பற்றி… அவரின் கலையின் அடியொற்றி…
வாருங்கள். வாரம் தோறும் கலைவாணரோடு பயணிப்போம்…
ஆமாம் ஆமாம்… இதுவும் நம்கொரு கலைப் பயணம்தானே? கலைவாணரோடு பயணிப்பதை வேறெப்படி அழைப்பதாம்? கலைவாணரின் கதையைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் இந்த நல்லதொரு கலைப் பயணத்தில் நீங்கள் எல்லோரும் கைகோர்த்து வாருங்கள்…
( கலைப் பயணம் தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |