எழுதுபவன் என்பவன் எல்லோரையும் மகிழ்விக்கிற கழைக் கூத்தாடி அல்ல
நம் வாசகர்களில் பெரும்பாலானோர் பொழுது போக்குக்காகக் கதை படிப்பவர்கள் என்பதால் அவர்கள் பாத்திரத்தோடு ஒன்றாமல் தங்கள் மனம்போன கற்பனைகளில்
இலயித்து விடுகிறார்கள். அதன் விளைவாக, இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பான விருபங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்ப அந்த ஆசிரியன் எழுதுகிறானா என்று கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள்.
தாங்கள் படிக்கிற நாவலை ஒரு பிரச்சினையாக வைத்துத் தங்களுடைய சமத்காரங்களை நிரூபிப்பதற்காக இந்த நாவலின் மீது ‘மேற்பந்தயம்’ கட்டுகிறார்கள். பத்திரிகைகாரர்களுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான
வியாபாரம். இந்த வாசகர்களின் சமத்காரங்களுக்கு ஏற்ப கதைகளை வளைத்து வளைத்து எழுதுகிறார்கள் பெரும்பாலான தொடர்கதை ஆசிரியர்கள்.
ஆனால் ஒரு நாவலை அப்படி எழுத முடியாது. எழுதுபவன் என்பவன் எல்லோரையும் மகிழ்விக்கிற கழைக் கூத்தாடி அல்ல. வாசகருடைய விருப்பமோ
அல்லது எழுதுகிறவனுடைய
விருப்பமோ கூட ஒரு நாவலின் போக்கை, கதியை மாற்றிவிட முடியாது.
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது.
சொல்கிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லிவிட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம்
நான் கண்டு கொண்டுவிட்டேன்
-ஜெயகாந்தன் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ முன்னுரையில்.