இணை

 இணை
இணை
சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் போன ராமசாமி செருப்பை வாசலில் கழற்றிப் போட்டு விட்டு அப்படியே திண்ணையில் அமர்ந்தார்.
தோளில் கிடந்த துண்டால் வியர்வையைத் துடைத்தபடி ‘சித்திர வையாசியில போடுற மாரியில்ல அப்பியல்ல வெயிலுப் போடுது’ என்றார் சற்றே சத்தமாக.
‘வந்துட்டியளா… வந்தவுக ஏ வெளியிலயே ஒக்காந்துட்டிய…?’ சப்தம் கேட்டு வெளியே பார்த்துக் கேட்ட பார்வதி, தண்ணீர்ச் சொம்போடு வந்தாள்.
‘ம்… உள்ள வந்தோடனே போன காரியம் என்னாச்சுன்னு கேட்டுக்கிட்டு நிப்ப… என்ன சொல்றதுக்கு இருக்கு… மனசுல சந்தோசமிருந்தாத்தானே வரும்போதே ஊட்டுக்குள்ள போயிச் சொல்லோனும்ன்னு தோணும்… இங்கதான் சங்கட்டம் மட்டுமே இருக்கே…’ என்றவர் சொம்புத் தண்ணிடிய ‘மடக்… மடக்’கென்று குடித்தார்.
காலிச் சொம்பை பார்வதியிடம் நீட்டியடி இடது கையால் தோளில் கிடந்த துண்டின் ஒரு முனையைப் பிடித்து வாயைத் துடைத்துக் கொண்டார்.
சொம்பை வாங்கியபடி ‘என்னாச்சுங்க… இம்புட்டு வருத்தமாப் பேசுறீங்க… போன காரியம் நடக்கலையா…’ கவலையோடு கேட்டபடி அருகில் அமர்ந்தாள் பார்வதி.
தன்னுடைய பதினெட்டாவது வயதில் ராமசாமியின் மனைவியானவள் பார்வதி, இப்போது அறுபத்தைந்து வயதாகிறது. அஞ்சு பிள்ளைகளின் தாய்… யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கணவனின் சொல்லை இன்று வரை காப்பாற்றி வருபவள்… யாரையும் அதிர்ந்து பேசமாட்டாள்… ராமசாமியைப் பிரிந்து அதிக நாட்கள் எங்கும் தங்கியதில்லை… அவர் என்ன செய்யிறாரோ நானில்லைன்னா அந்த மனுசனுக்கு நாளும் பொழுதும் நகராதுன்னு புலம்புவாள்… பார்வதியின் பாதுகாப்பே ராமசாமியை நகர்த்திக் கொண்டிருந்தது என்பதே உண்மை. 
அதேபோல் ஒருமுறை கூட மனைவியை ராமசாமி கை வைத்து அடித்தது இல்லை… எப்பவும் அவளை விட்டுக் கொடுக்காமல்தான் பேசுவார்… எதாயிருந்தாலும் பார்வதி என்ன சொல்லுதோ அதுதான் முடிவுன்னு நிற்பார்… யாருக்காகவும் பார்வைதியை விட்டுக் கொடுக்கமாட்டார். சின்னச் சின்ன கோபமென்றாலும் பெரும்பாலும் சமாதானமாய்ப் போவது அவர்தான்… பார்வதி எங்காவது தூரம் தொலைவுக்கு ஒருநாள் போனாலும் அவருக்குக் கை ஒடிந்தது போலிருக்கும்.
‘ஏங்க என்னாச்சு… மொகமெல்லாம் வாடிப் போயிருக்கு… மொகமே நல்லால்ல…’
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல…. வெயில்ல வந்தேனுல்ல… அதான்… கொஞ்சம் ஒக்காந்து எந்திரிச்சா சரியாப் போகும்…’
‘ஏங்க ஒங்களத் தெரியாதவளாங்க நானு… நாலு நாள்ல ஒங்களப்பத்தித் தெரிஞ்சிக்கிட்டவ… நாப்பது வருசத்துக்கு மேல ஒங்க கூட இருக்கேன்… ஒண்ணுமில்லன்னு சொன்னா சரின்னு எந்திரிச்சி குண்டி மண்ணத் தட்டிட்டுப் போயிருவேன்னு நெனச்சீங்களாக்கும்…’
‘இல்ல பாரு… அதெல்லாம் ஒண்ணுமில்ல… வெயில் அதிகமிருக்குல்ல… அதான் அசதியாயிருக்கு…’
‘அப்ப வந்தோடனே உள்ள ஏன் வரலன்னு கேட்டதுக்கு மனசுல சந்தோஷமில்லன்னு சொன்னீங்க… இப்ப வெயில் அது… இதுன்னு கத சொல்றீய…’
‘அதான் இல்லங்கிறேனுல்ல… சும்மா தொணதொணன்னு… போ… போயிக் கெடக்க வேலயப் பாரு… சும்மா கேள்வி கேட்டுக்கிட்டு…’ சற்றே கோபமாய்ப் பேசினார் ராமசாமி.
என்னைக்கும் இல்லாத திருநாள் இன்னக்கு இவருக்கு என்னாச்சு… ஏ இம்புட்டுக் கோபம் என யோசித்தபடி, ‘க்க்கும்… சொல்லாட்டிப் போங்க… எனக்கென்ன வந்துச்சு… யாரு தூக்கிச் சொமக்கப் போறா… நீங்கதானே…’ என்றபடி கோபமாய் எழுந்து சென்றாள்.
தலையில் கை வைத்து அமர்ந்தடி ராகவன் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தார். ஆத்தா செத்ததுக்குக் கூட அழுகாத பயன்னு பேர் வாங்கின ராமசாமியின் கண்களில் இருந்து  அவரை அறியாமல் கண்ணீர் இறங்கியது.
‘ஏப்பா இப்ப என்னைய என்ன பண்ணச் சொல்றீங்க…?’ சற்றே வேகமாய்க் கேட்டான் ராகவன்.
‘இல்லப்பா… முன்ன மாதிரி வெவசாயமிருந்தா கடன அடச்சி நிமிந்திருப்பேன்… வெவசாயமும் இல்ல… இப்ப வயக்காட்டயும் வாங்க ஆளில்ல… அதான்…’
‘அதுக்கு…? நீங்க ஊரைச் சுற்றி கடன் வாங்கி வப்பீங்க… அதெல்லாம் நான் அடைக்கணுமாக்கும்… நானும் உழைச்சித்தான் சம்பாரிக்கிறேன்… கோணிச் சாக்குல இங்க ஒண்ணும் கொட்டிக் கிடக்கலை…’
‘கொட்டிக்கிடக்குன்னு சொல்லலப்பா… அதெல்லாம் ஒங்க அக்காக்க கலியாணத்துக்கும் ஒங்க படிப்புக்கும் வாங்குனதுதானே… என்னால முடியல… அதான் ஒங்கிட்ட…’
‘பெத்தவுகதானே படிக்க வைக்கணும்… கட்டிக் கொடுக்கணும்… அதைக் கணக்குப் பாத்து எங்கிட்ட வந்து கேக்குறிய…’
‘இல்லப்பா கணக்குப் பாக்கல… என்னால முடியல… கொடுத்தவன் ரொம்பக் காலமாச்சுன்னு எங்கிட்ட வந்து நிக்கிறான்… அவனுக்கு ஏதோ அவசரம்… நெலத்த எடுத்துக்கடான்னா அதெதுக்கு ஒண்ணுக்கும் புண்ணியமத்த பூமின்னு சொல்லுறான்…’
‘அதுக்கு நான் என்ன பண்ணனும்..? அஞ்சு பேரைப் பெத்துக்க முடிஞ்சிச்சில்ல… அதுகளுக்குச் செலவு பண்ணத்தானே வேணும்… உங்களுக்குச் செலவு பண்ணினேன் தாங்கன்னு வந்து நின்னா… வட்டிக்காரனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..?’
‘அப்படிச் சொல்லாதப்பா… என்னால முடிஞ்சதை எல்லாம் அடச்சிட்டேன்.. இப்ப முடியல… அதான் ஒங்ககிட்ட வந்து நிற்கிறேன்…’
‘ஏன் இவரை மட்டுந்தான் பெத்தியளா… இவருக்கு மூத்தவுக… இளையவுகல்லாம் இருக்காங்கதானே… அங்க கேளுங்க… நாங்க மட்டும்தான் கொட்டி வச்சிருக்கமா…?’ மருமகளாய் சொந்தம் விட்டுப் போகக்கூடாதென வந்த தங்கை மகள் தேன்மொழி வேகமாய்க் கேட்டாள்.
‘கொட்டி வச்சிருக்கீங்கன்னு வரலத்தா… அவனுக தள்ளியிருக்கானுக போன் பண்ணிப் பேசிக்கலாம்… நீங்க பக்கத்துல இருக்கதால நேர்ல வந்தேன்… எல்லார்க்கிட்டயும்தான் கேக்கணும்… ஒங்கள மட்டும் தாங்கன்னு சொல்லல…’
‘முதல்ல அங்க கேளுங்க… அப்பறம் இங்க வாங்க பாக்கலாம்… பக்கத்துல இருந்தா நாங்கதான் கெடச்சோம் போல தொட்டது தொன்னுறுக்கும்….’
‘இல்லத்தா… இல்லாத குத்தத்துக்கு புள்ளக்கிட்ட கேக்குறது தப்பில்லதானே…’
‘அப்பா… மத்தவங்ககிட்ட கேளுங்க… எல்லாரும் நல்லாத்தான் இருக்காக…. எல்லாத்துக்கும் நான் அவுத்துக்கிட்டு இருக்க இங்க பணம் விளையலை… நீங்க சாகுற வரைக்கும் கடன வாங்கி வாங்கி வப்பீக… அதையெல்லாம் கட்டிக்கிட்டே இருந்தா… எங்க புள்ளைங்களுக்குன்னு எப்ப எதாவது சேக்குறது…’
‘என்னப்பா இப்படிப் பேசுறே…?’
‘வேற எப்படிப் பேசச் சொல்றீங்க… மாசாமாசம் நாங்க மூணு பேரு கொடுக்கிறதுக்கு மேல கடன் வாங்கிக்கிட்டே இருந்தா என்னதான் செய்யிறது… நீங்க அங்க இருக்குறதுக்கு…. ஆளுக்கு ஒரு வீட்டுல இத்தன மாசம்ன்னு இருந்து தொலச்சிட்டுப் போகலாம்… சும்மா எங்க வதையுங்கொலையும் வாங்கிக்கிட்டு… அவங்ககிட்ட பணத்தைக் கேளுங்க… நானும் அவங்கிட்ட பேசுறேன்…. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருந்தாத்தான் சாகப்போற சமயத்துலயாவது திருந்துவீக… இல்லேன்னா அம்மாவும் உங்கள ஒண்ணுஞ் சொல்லாது… நீங்களும் எப்பவும் போல கடன வாங்கி எங்க தலையில கட்டி வச்சிட்டுப் போயிருவீக…’
‘காசில்லன்னு சொல்லு… கடனாளின்னு திட்டு… பொழக்கத் தெரியாதவன்னு சொல்லு… பெத்தபுள்ளக்கிச் செஞ்சத கணக்குப் பாக்குறியேன்னு சொல்லு ஏத்துக்கிறேன்… பாருவ எதாவது சொன்னாலோ என்னயும் அவளயும் பிரிக்கணும்ன்னு நினச்சி எதுனாச்சும் பேசினாலோ நா பொல்லாதவனாயிடுவேன்… ஆமா… பாத்துக்க…’
‘பொல்லாத பாரு… செல்லமாத்தான் கூப்பிடுவாக… அதுதான் உங்களைக் கெடுத்து வச்சிருக்கு… அப்பவே கண்டிச்சிருந்தா… கடன்… கடன்னு ஊரைச் சுத்தி கடன வாங்கி வச்சிருக்கமாட்டீங்கதானே… பாரு… பாருன்னு… அதான் பாக்குறோமே நீங்க வாழ்ந்த லட்சணத்த…’
‘ஆமாடா அவ எம் பாருதான்… என்னய அவ கண்டிக்கலதான்… ஏன்னா நா கடன்பட்டது ஒங்க படிப்புக்காகவும் பொட்டப்புள்ளய கலியாணத்துக்காகவும்தான்… நானும் எம்பொண்டாட்டியும் பகட்டா வாழணுமின்னு இல்ல… பலநா ஒங்களுக்கு ஊத்திக் கொடுத்துட்டு அவ பச்சத்தண்ணியக் குடிச்சிட்டுத்தான் படுத்திருந்திருக்கா… ஒரு பொட்டு தங்கம் அவளுக்கு வாங்கிக் கொடுத்த முற தெரியாது எனக்கு… அவ போட்டு வந்ததை வித்துச் செலவழிச்சிருக்கேன்… என்ன எப்படி இருந்தாலும் என்ன விட்டுக் கொடுக்காதவ அவ… ஆமா… அவ எம் பாருதான்டா…’
‘சரி… சரி… என்ன சொன்னாலும் திருந்தமாட்டீங்க…. என்னமோ பண்ணித் தொலைங்க… என்னால இப்ப சல்லிக்காசு கொடுக்க முடியாது…’
‘சரி வர்றேன்…’ 
வேதனையை பெருமூச்சாய் விட்டு விட்டுத் திண்ணையில் இருந்து எழுந்தார்.
துண்டால் முகம் துடைத்துக் கொண்டார். ‘க்க்கும்’ எனச் செருமியபடி வீட்டுக்குள் நுழைந்தார்.
பார்வதி சமைத்துக் கொண்டிருந்தாள். ராமசாமியைப் பார்த்தும் பார்க்காதது போல் நின்றாள்.
‘பாரு… ஏய் பாரு…’
‘சொல்லுங்க…’
‘கோச்சுக்கிட்டியா…?”
“நா எதுக்குக் கோவிக்கணும்…?’
‘மனசு வலிச்சதை ஒங்கிட்டச் சொல்லணுமான்னு யோசிச்சேன்… அதான்….’
‘…’
‘ஏய் பாரு… என்ன பேசமாட்டேங்கிறே..?’
‘என்ன பேச… இத்தன வருசத்துல ஒங்ககிட்ட நா எதயாச்சும் மறச்சிருப்பேனா… இல்ல நீங்கதான் எங்கிட்ட மறச்சிருப்பியளா… அப்புடி என்னத்த சொல்லாதத சொல்லியிருக்கப் போறான்… காசு தரமுடியாது அவனுககிட்ட கேளுன்னு சொல்லியிருப்பான்… அம்புட்டுத்தானே… இதுக்கு எதுக்கு நீங்க ஒடச்சி போனதுமில்லாம எங்கிட்டயும் கோபப்படுறிய…’ அழுகை அடைத்தது.
‘ச்சீ… பாரு…. நீ இல்லேன்னா நா இல்லடி… பணம் தரலன்னு சொன்னாவா நான் இப்புடி வந்து கிடக்கப் போறேன்…’
‘பின்ன என்ன சொன்னான் ஒங்கள…’ முந்தானையில் முகம் துடைத்தபடி கோபமாய்க் கேட்டாள்.
ராமசாமி பதில் பேசாமல் நின்றார்.
‘தரக்கொறவாப் பேசினானா…?’ கோபம் வார்த்தையில் தெரிந்தது.
‘தரக்கொறவெல்லாம் இல்ல…. நீதான் என்னைக் கெடுக்கிறியாம்..?’ 
‘சொல்லட்டுமே… ஆமான்னு சொல்லிட்டு வரவேண்டியதுதானே… அதவிட்டுட்டு அங்கயிருந்து அதத் தூக்கிக்கிட்டு வந்து திண்ணையில போட்டியளாக்கும்…’
‘அத மட்டும் சொல்லலயே… ஆமான்னு சொல்ல…’
‘பின்னே…’
‘ஒன்னயும் என்னயும்…’
‘நம்மள…’
‘பிரிச்சி வக்கணுமாம்…. ஒவ்வொருத்தவன் வீட்டுலயும் சில மாசம்ன்னு நீயும் நானும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காம சுத்தி வரணுமாம்…’ சொல்லும் போதே வெடித்தார்.
பார்வதி எதுவும் பேசவில்லை….
எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அதச் சொல்ல அவனாருங்க… அதுக்குப் பதிலடி கொடுக்காம தூக்கிச் சொமந்துக்கிட்டு வந்தியளாக்கும்…’
‘கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டுத்தான் வந்தேன்… ஆனா எல்லாருமாச் சேர்ந்து ஒன்னய என்ன விட்டுப் பிரிச்சிருவாங்களோன்னு பயமாயிருக்கு பாரு…’ கண் கலங்கச் சொல்லியபோது குழந்தையானார்.
‘என்ன இது… ஏழு ஊரு சனத்துக்கு நல்லது கெட்டது சொல்றவுக சின்னப் புள்ளயாட்டம் அழுதுகிட்டு… ‘ என்றபடி மார்போடு அணைத்து முந்தானையால் அவரின் கண்ணைத் துடைத்தபடி, ‘நம்மள சாவால கூட பிரிக்க முடியாதுங்க… இவனுக யாரு நம்மளப் பங்கு போட…’ என்றாள் அழுத்தமாய்.
விறகடுப்பில் நெருப்பு ‘பரபர’வெனப் பற்றி எரிய, உலை கொதித்துக் கொண்டிருந்தது.
-‘பரிவை’ சே.குமார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...