‘மனிதர்களை வாசிக்கிறேன்’

 ‘மனிதர்களை வாசிக்கிறேன்’

‘மனிதர்களை வாசிக்கிறேன்’ எனும் தலைப்பில் வெ.இறையன்பு பேசியது: புத்தகங்கள் அதிகமாக வெளியிடப்படாத காலத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், தற்போது அதிகமான நவீன வடிவில், நல்ல கருத்துள்ள புத்தகங்கள் ஏராளமாக வெளியிடப்பட்டும், அதை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

ஆங்கிலப் புத்தகங்களை விஞ்சுகிற அளவுக்கு தமிழில் தரமான அறிவுப்பூர்வமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகவே தமிழை மட்டும் அறிந்த வாசகர்களின் வாசிப்பு உலகம் கூட விரிவடையும் வகையில் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஆனால், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான புத்தகங்களையே படிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

தமிழில் பொதுவான இலக்கியப் புத்தகங்களை விரும்பிப் படிக்கும் இளைஞர்கள் குறைவாகவே உள்ளனர். அதேபோல இலக்கிய விழாக்களுக்கும் இளைஞர்கள் அதிகம் வருவதில்லை. கல்வி நிலையங்களில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் கூட மாணவ, மாணவியர் கட்டாயமாகவே உட்கார வைக்கப்படுகின்றனர். அப்படி கட்டாயமாக உட்கார வைக்கப்படும் நிலையில், மேடைப் பேச்சை மாணவர்கள் கவனிப்பதில்லை. செல்லிடப்பேசியை பார்த்தபடியே பொழுதைக் கழிக்கிறார்கள். இந்தநிலையை மாற்றுவது அவசியம்.

தமிழ் பேசத் தெரிந்த, அதே சமயத்தில் படிக்கத் தெரியாத சமூகம் உருவாகி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. ஆகவே ஊடகங்களும் பத்திரிகைகளும் தமிழ் வாசிப்பு பழக்கம் வளர தங்களது பங்களிப்பை வழங்குவது அவசியமாகும். இலக்கிய வாசிப்பு குறைந்தால், பத்திரிகை வாசிப்பும் குறைந்துவிடும். ஆகவே ஊடகங்கள் வாசிப்பு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரபரப்பான செய்திகளை விட அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் வாசிப்புக்கான இலக்கிய நிகழ்ச்சிகளை அதிகம் ஒளிபரப்புவது நல்லது.

புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகள் முன்பு தொலைக்காட்சித் தொடர்களாக ஒளிபரப்பப்பட்டன. அதேபோல தற்போதும் ஒளிபரப்பினால் தமிழ் மேன்மையுறும். மாணவர்கள் பொதுவான புத்தகங்களை படிக்கக்கூடாது, பாடப் புத்தகங்களை படிக்கவே முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நிலையே பள்ளிகளில் உள்ளன.

பொதுப் புத்தகம் படிக்கும் மாணவர் பாடங்களில் சிறந்து விளங்குவார் என்பதே உண்மை. ஆகவே புத்தகக் காட்சிக்கு மாணவர்கள் கட்டாயம் சென்று வரவேண்டும் என கல்வி நிலையங்கள் அறிவுறுத்துவது அவசியம். மாணவர்களிடையே வாசிப்பை அதிகமாக்கி அவர்களது அறிவை விசாலமாக்கவேண்டும் என்றார்.

நன்றி: தினமணி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...