அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி! 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் வெற்றி! | தனுஜா ஜெயராமன்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது.
உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது வெற்றியை பதிவு செய்தது
இந்திய அணி. இந்தியா பங்கேற்ற 7 போட்டிகளிலும்
வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.
நேற்று உலகக் கோப்பை போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா vs இலங்கை அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 92 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அடுத்தபடியாக ஆடி 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி களமிறங்கியது முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா (0), திமுத் கருணாரத்னே (0), குசல் மெண்டிஸ் (1 ரன்), சதீரா சமரவிக்கிரம (0), சரித் அசலங்கா (1 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் தொடர்ச்சியாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சுக்கு இரையாகினர். ஏஞ்சலோ மேத்யூஸ் (12 ரன்கள்), துஷன் ஹேமந்தா (0), துஷ்மந்தா சமீரா (0), கசுன் ரஜிதா (14 ரன்கள்), தில்சஷன் மதுஷங்கா (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.
இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.