டெல்லியில் காற்று மாசு காரணமாக  பள்ளிகள் விடுமுறை! | தனுஜா ஜெயராமன்

 டெல்லியில் காற்று மாசு காரணமாக  பள்ளிகள் விடுமுறை! | தனுஜா ஜெயராமன்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து 5ஆவது நாளாக காற்று தரக்குறியீடு 346 என மிக மோசமடைந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது.

அண்மையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு 309 புள்ளி என்ற அளவில் மிக மோசமான நிலையை எட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காற்று மாசுபாடு அதிகரிப்பால், டெல்லியில் அவசர கால சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இதனால், மூச்சுத்திணறல், சுவாச கோளாறு என உடல்நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக பல கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் காற்று மாசுபாடு குறையாததால் டெல்லியில் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், காற்று மாசு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...