கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்!
கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்!
தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் ரஹ்மான் கிட்டத்தட்ட தனது திரையுலக வாழ்க்கையில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
தற்போது தமிழ், மலையாளத்தையும் தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார் ரஹ்மான். ஹிந்தியில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கண்பத் திரைப்படம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் டைகர் ஷெராப், கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர், விகாஸ் பால் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் அடுத்தடுத்த தனது படங்கள் குறித்தும் பத்திரிக்கையாளர்களிடம் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் நடிகர் ரஹ்மான்.
“1983ல் பள்ளி தேர்வை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த நேரம் என்னை அழைத்துச்செல்ல வந்த பெற்றோருடன் கூடவே மலையாள இயக்குனர் ஒருவரும் வந்தார். சினிமாவில் நடிக்கிறாயா என கேட்டார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான், நான் சினிமாவில் நடிப்பது போல ஒரு கனவு கண்டிருந்தேன். அந்த கனவு நனவான தருணம் போல கூடெவிடே படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததில்லை. எலக்ட்ரானிக் என்ஜினியர் ஆகவேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதன்பிறகு நடிப்புதான் உலகம் என மாறியது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வெற்றி அதில் பங்காற்றிய அனைவருக்கும் சேர்த்து கிடைத்த வெற்றி. 20 வருடங்களுக்கு பிறகு வரும் தலைமுறையினருக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வரலாறாக இருக்கும். கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக படம் இயக்கும் எண்ணம் எழுந்தது. எப்போதும் எனக்கு கே.பாலச்சந்தர், பாரதிராஜா பாணியில் தான் எண்ணங்கள் தோன்றும் என்பதால் அதேபோல உணர்வு பூர்வமான ஒரு கதையை உருவாக்கினேன், படத்திற்கு கடவுளின் தோட்டம் என்று பெயர் வரும் விதமாக ‘ஈடன் கார்டன்’ என டைட்டில் வைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. என்னுடைய மனைவியும் கூட, லட்சுமி வீடு தேடி வரும்போது அதை வேண்டாம் என சொல்லிவிட்டு எதற்காக படம் இயக்குகிறீர்கள் என கூறி என் முடிவை மாற்றிவிட்டார்.
ஆரம்ப காலத்தில் நான் நடித்த சில படங்களில் ஆடிய நடனத்தை பார்த்துவிட்டு என்னை மிகப்பெரிய டான்சர் என நினைத்து விட்டார்கள். ஆனால் நான் டான்சர் இல்லை. அப்படி நினைத்து ஒரு படத்தில் எனக்கு டான்ஸ் மாஸ்டர் கதாபாத்திரம் கொடுத்து விட்டார்கள். நானும் வழக்கம்போல டிஸ்கோ டான்ஸ் ஆடுவது தானே என நினைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அங்கே பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் குருவாக நடிக்கப் போகிறேன் என்று. நடனம் என்பதே பெரிதாக தெரியாதபோது அதிலும் பரதநாட்டியம் சொல்லித் தரும் குரு என்றால் எப்படி சமாளிப்பது ? அதுமட்டுமல்ல அந்த காட்சியில் என் மாணவிகளாக நடிப்பவர்கள் எல்லோருமே கலாச்சேத்ராவில் நடனம் பயின்ற மாணவிகள் என சொன்னார்கள். பிறகு என்னுடைய நடன இயக்குநரிடம் விஷயத்தை விளக்கி மறுநாளில் இருந்து நான் மாணவிகளுக்கு என்ன விதமாக நடன அசைவுகள் கற்றுத் தரப்போகிறேன் என்பதை மட்டும் முதல் நாள் இரவு நான்கு மணி வரை ரிகர்சல் செய்துவிட்டு மறுநாள் படப்பிடிப்பில் நடித்து சமாளித்தேன். இதேபோல பல நாட்கள் சமாளித்து அந்த படத்தை முடித்தேன்” என்று நடனத்தில் தான் சமாளித்த அனுபவங்களை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் ரஹ்மான்.
ஏ.ஆர்.ரகுமான் கிட்டத்தட்ட எனது சகோதரர் என்பதால் பல படங்களில் என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் இசையமைப்பாளராக அவரையும் ஒப்பந்தம் செய்து தரும்படி வற்புறுத்தினார்கள். இதனாலேயே பல படங்களை நான் தவிர்க்க வேண்டியதாக ஆகிவிட்டது. அதேசமயம் சங்கமம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடித்திருந்தேன். அந்த படத்திலும் நாட்டுப்புற நடன காட்சி இருந்தது. அது மட்டுமல்ல இரண்டு ரஹ்மான்களின் கூட்டணியில் இந்த படம் உருவானதால் ஒரு எதிர்பார்ப்பும் அந்த படத்திற்கு இருந்தது. கிளைமாக்ஸில் ஆடும் நடனத்திற்காக இங்கே சென்னை விஜிபியில் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டு பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட அந்த காட்சியில் பல பேர் முன்னிலையில் நடனமாடி பாராட்டுக்களை பெற்றேன்.
நீங்கள் இன்னும் அப்போது போல இப்போதும் இளமையாகவே இருக்கிறீர்களே என கேட்டால் நல்ல எண்ணங்கள் இருந்தால் வயது ஆகாது என்று சொல்வேன்” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் ரகுமான். தொடர்ந்து பேசும்போது, “நமக்கு மனரீதியாக நமக்கு எந்த அழுத்தமும் இருக்கக் கூடாது. தேவையற்ற பழக்கங்கள் என்னிடம் இல்லை. குறிப்பாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பதே இல்லை. அதனால் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சாப்பாடு கூட எனது தொழிலாகி விட்டதால் அதற்கேற்ற முறையை பின் தொடர்கிறேன். இப்போதெல்லாம் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. அரிசி சாதம் தான் சாப்பிடுகிறேன்..
90களின் துவக்கத்திலேயே பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அந்த சமயத்தில் இங்கே தமிழ், மலையாளத்தில் பிசியாக நடித்து வந்தேன் இப்போது மீண்டும் அதற்கான நேரம் வந்திருக்கிறது. கண்பத் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளேன். இந்த படத்தின் இயக்குநர் விகாஸ் பால் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பவர் என பெயர் பெற்றவர். என்னிடம் இந்த படத்தின் கதையை சொன்னபோது இதில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்றும் அவரது மகனாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னதும் மறு யோசனை இன்றி உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டேன்.
நான் சிறுவயதிலிருந்தே பார்த்து அவரது ஸ்டைலை ரசித்து வளர்ந்தவன்.. அமிதாப்பச்சன் ரசிகர்களாகவே தான் எல்லோருமே இருப்பார்கள். அதனால் படப்பிடிப்பின்போது அவரிடம் சென்று நான் உங்கள் ரசிகன் என மற்றவர்கள் சொல்வது போல நானும் சொல்லி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர் என்னைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார். குறிப்பாக தொண்ணூறுகளில் நான் நடித்த குற்றப்பத்திரிகை திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது குறித்து என்னிடம் கேட்டு அந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதா என தெரிந்து கொண்டார். அந்தப்படத்தின் ரிலீஸ்க்காக அப்போது அவரும் தன்னுடைய பங்கிற்கு முயற்சி செய்தார் என்பதையும் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன். எனக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் ஏற்கனவே அமைந்தது, அந்த வரிசையில் இப்போது அமிதாப் பச்சனுடனும் நடித்து விட்டேன்.
பாலிவுட்டை பொருத்தவரை தென்னிந்திய கலைஞர்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது, என்ன படம் வெளியாகிறது என்பது முதற்கொண்டு உடனடியாக அங்கே தெரிந்து விடுகிறது. கண்பத் படப்பிடிப்பின்போது என்னிடம் வந்து சிலர் சிங்கம் 2, துருவங்கள் பதினாறு படங்களில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது என பாராட்டினார்கள். அப்போதுதான் டப்பிங் படங்களின் வீச்சு பற்றி தெரிந்து கொண்டேன். இந்த படத்தில் கதாநாயகன் டைகர் ஷெராப்புக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொடுக்கும் கோச்சாக நடித்துள்ளேன். பாலிவுட் படம் என்றதுமே கலர் கலராக உடைகள் கொடுப்பார்கள் என நினைத்தால் கிட்டத்தட்ட பிச்சைக்காரன் போன்ற ஒரு தோற்றத்தில் என்னை அப்படியே மாற்றி விட்டார்கள். இந்த படத்தின் கதை 2075ல் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. 2075ல் ஒரு புது உலகம் எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் காட்டி உள்ளார்கள். டைகர் ஷெரப் நிஜமாகவே மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த நடிகர். அந்தரத்தில் துள்ளிக்குதித்து டைல் அடிப்பவர். அதனால் அவரை விட ஒரு படி நான் மேலே பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. எனக்கும் அவருக்குமே ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அதிலும் லடாக்கில் பனி நிறைந்த பிரதேசத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இடத்தில் இந்த சண்டைக் காட்சியை படமாக்கியபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுவிட முடியாமல் திணறிய அனுபவங்களும் கிடைத்தன.
என்னுடைய குடும்பத்தில் எனது மூத்த மகள் நடிக்க விரும்பினார். படிப்பை முடித்துவிட்டு அதன்பின் நடிப்பது பற்றி பார்க்கலாம் என கூறினேன். பின்னர் படிப்பை முடித்தவர் அப்படியே திருமண வாழ்க்கையில் இணைந்து செட்டில் ஆகிவிட்டார்.
மலையாள திரையுலகில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அது எல்லா நேரத்திலும் எப்படி கிளிக் ஆகிறது என கணிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் எந்த படம் எடுத்தாலும் அதை இன்னொரு படத்துடன் ஒப்பிட்டு பேசும் பழக்கமும் எல்லா படங்களிலும் குறை கண்டுபிடிக்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. 90களின் காலகட்டத்தில் படப்பிடிப்பில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பல கதைகளை பேசிக்கொண்டு படம் பற்றி விவாதிப்போம். அப்போது ஒரு பாசம் அனைவரிடமும் இருந்தது. இப்போது அது இல்லை. எல்லாருமே கமர்ஷியலாக இருக்கிறார்கள். காலம் மாறி வருவதால் அவர்களையும் குறைசொல்ல முடியாது.
இப்போது தமிழ் தான் தமிழில் தான் அதிகம் நடிக்கிறேன். இங்கே எத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கையைத்தான் பார்க்கிறார்கள் அதைப்பொருத்து தான் வாய்ப்பு வருகிறது. அதனால் தான் குறைவான படங்களில் நான் நடிப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் எப்போதும் ஒரு நடிகருக்கு அவர் நடித்த படம் எத்தனை நாள் ஓடியது என்பது தான் பெருமையைத் தரும். தமிழில் தற்போது கார்த்திக் நரேன் டைரக்சனில் நிறங்கள் மூன்று என்கிற படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு பிடிக்காத ஒரு அதேசமயம் பாசிட்டிவான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். நிஜத்தில் நான் அப்படி இருக்க விரும்ப மாட்டேன். எந்த ஒரு ஹீரோவும் கூட இந்த கதாபாத்திரம் பண்ண மாட்டார்கள்.
இதை அடுத்து துப்பறிவாளன் 2, ஜனகனமன ஆகிய படங்களும் தயாராகின்றன. நீட் தேர்வை எதிர்த்து உருவாகியுள்ள அஞ்சாமை என்கிற படத்தில் நீதிக்காக போராட காக்கி யூனிபார்மை கழட்டி வைத்துவிட்டு கருப்பு கவுனை அணிந்து கொண்டு போராடும் போலீஸ் அதிகாரியாகவும் வழக்கறிஞராகவும் நடித்துள்ளேன். மலையாளத்தில் நான் நடித்துள்ள எதிரே என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது தவிர ‘1000 பிளஸ் பேபீஸ்’ என்கிற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறேன். கிட்டத்தட்ட 18 கோடி செலவில் இந்த படம் உருவாகி வருகிறது” என்றார் ரஹ்மான்.